Published : 21 Feb 2025 10:43 AM
Last Updated : 21 Feb 2025 10:43 AM

பேட்டிங், பவுலிங்கில் முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி வென்றது எப்படி?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததோடு, முதல் போட்டியை தோற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

டாஸ் வென்றிருந்தால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருப்போம் என ரோஹித் சர்மா கூறியது எத்தனை பெரிய தவறில் போய் முடிந்திருக்கும் என்பது போட்டியைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆகவே இன்னும் கேப்டன்சியில் ரோஹித் சர்மா பிட்சின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று தெரிகிறது.

வங்கதேசம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து படுமோசமான ஷாட் தேர்வுகளினால் முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே விக்கெட்டுகளை வரிசையாகக் கொத்தாக விட்டனர். அதுவும் ஷமி, ஹர்ஷித் ராணாவின் சாதாரண குட் லெந்த் பவுலிங்தான் வீசினர், ஸ்விங் சுத்தமாகக் கிடையாது. அப்படியிருக்கும் போது நின்று ஆடியிருந்தால் நிச்சயம் 270 முதல் 275 ரன்கள் வரை இந்தப் பிட்சில் அவர்கள் எடுத்திருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும். அதனால்தான் டாஸ் வென்று பீல்டிங் செய்திருப்பேன் என்று ரோஹித் சொன்னது மோசமான முடிவு என்பது புரிய வருகிறது.

இந்திய அணி பீல்டிங் படுமோசம் 3 கேட்ச்கள் டிராப், அதுவும் அக்சர் படேல் ஹாட்ரிக் பந்தில் கையில் வந்த கேட்சை ரோஹித் சர்மா விட்டார். அவர் விட்டது ஜாகர் அலி என்ற பேட்டருக்கு. பின்னால் ராகுலுக்கு இதே ஜாகர் அலி கேட்ச் விட்ட போது பெவிலியனில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மா அசிங்கமாக கையை ஆட்டி செய்கை செய்து கொண்டிருந்தார். தமிழ் வர்ணனையில் எந்த வீரர் கையில் வந்த கேட்சை விட்டாலும் அது கிரிக்கெட்டுக்கு அழகல்ல என்று கூறுவதை விடுத்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று அசட்டுத் தத்துவம் பேசிக்கொண்டிருந்தனர். ‘நானும் விட்டேன், அவரும் விட்டார் பார்த்தீர்களா’ என்பது போல் ரோஹித் சர்மா செய்கை இருந்தது.

ஏதோ ஜாகர் அலி பின்னால் கேட்ச் விடுவார் என்று தெரிந்தே இவர் அவருக்கு கேட்ச் விட்டது போல் ரோஹித் சர்மாவுக்கு ஏன் இந்த அசட்டுப் பெருமிதம்? இதோடு மட்டுமல்லாமல் சத நாயகன் ஹிரிடோய்க்கு ஹர்திக் பாண்டியா குல்தீப் யாதவ் பந்தில் கேட்சை விட்டார். அப்போது ஹிருதய் 23. தொடக்க வீரர் தன்ஷித் தான் கொஞ்சம் சரியாக ஆடியது போல் இருந்தது, ஆனால் அவர் 25 ரன்களில் அக்சர் படேல் பந்து திரும்பும் என்று நினைத்து சிக்கினார்.

மற்றபடி சவுமியா சர்க்கார் (0), ஷாண்ட்டோ (0), மெஹதி ஹசன் (5) ஆகியோர் மோசமான ஷாட்களில் ஆட்டமிழந்து இந்தியாவுக்கு விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். பவுலிங் முயற்சியினால் விழுந்த விக்கெட்டுகள் அல்ல இது. ஷமியும் ராணாவும் லெந்த்தைக் கண்டுபிடிக்க சிரமப்பட்ட போது விக்கெட்டுகளைத் தாரை வார்த்துக் கொடுத்தனர். அக்சர் வந்தவுடன் தன்ஷித் மற்றும் அவருக்கே அதிசயமாக ஒரு பந்து திரும்ப முஷ்பிகுர் ரஹீமும் வெளியேறினார். 8.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் என்று ஆனது வங்கதேசம். அதன் பிறகுதான் ஜாகர் அலிக்கு ரோஹித் சர்மா ஹாட்ரிக் வாய்ப்புக் கேட்சைக் கோட்டை விட்டு, தரையைக் கையால் ஓங்கி அடித்தார் ரோஹித்.

அதன் பிறகு மிடில் ஓவர்களில் ஹிரிடோயும், ஜாகர் அலியும் நின்று பிரமாதமாக ஆடினர். ஸ்லோ பிட்சில் எப்படி ஆட வேண்டும் என்பதைக் காட்டினர். 2023 உலகக்கோப்பை இறுதிக்குப் பிறகு மிடில் ஓவரில் விக்கெட்டையே வீழ்த்த முடியாதது இந்தப் போட்டியில்தான். 24 ரன்களில் இருந்த போது ஜடேஜா பந்தில் ஜாகர் அலிக்கு ராகுல் ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார். ஹிரிடோய் 118 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் என்று சதம் எடுக்க, ஜாகர் அலி 68 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 154 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

முகமது ஷமி 5 விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் 6-வது முறையாக எடுத்தார், ராணா 3 விக்கெட்டுகள், அக்சர் 2 விக்கெட். 228 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்திய அணி ஆடிய போது, எப்படி முதல் 10 ஓவர் பவுலிங்கில் வங்கதேச பேட்டிங்கைச் சிதைத்ததோ, அதே போல் பவுலிங்கை ரோஹித் சர்மாவும், கில்லும் சிதைத்தனர். ரோஹித் சர்மா கிரீசில் நிற்காமல் மேலேறி வந்தே ஆடினார். ஏனெனில் நின்று ஆடி முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் பீட்டன் ஆகிக் கொண்டிருந்தார். 36 பந்துகளில் 41 ரன்களை 7 பவுண்டரியுடன் அடித்த ரோஹித் சர்மா கடைசியில் மாபெரும் கொடியேற்றி கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் அடித்த ஒரு சிக்ஸ் ஷாட் ஆஃப் த டே. தன்சிம் ஹசன் ஷாகிப் வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை மிட்விக்கெட் மேல் கனெக்ட் செய்த விதம் அற்புதம். முதல் 10 ஓவர்களில் 70 ரன்கள் என்பது இந்தப் பிட்சில் நல்ல ஸ்டார்ட்.

விராட் கோலியிடம் மேட்ச் இந்த கிரவுண்டில் இல்ல, இன்னொரு கிரவுண்டுலன்னு சொல்லி எங்காவது அனுப்பிச்சு விடுங்கப்பா. திணறுகிறார், பீல்டர் கையில் அடித்து கொண்டிருந்தார். வெறுப்பேற்றினார், வெளியே ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்றோர் பெஞ்சில் உட்கார்ந்திருக்க இவர் இருந்து கொண்டு உயிரை எடுத்து வருகிறார். 22 ரன்களைத் தடவித் தடவி எடுத்து கடைசியில் ரிஷாத் என்ற லெக் ஸ்பின்னர் வீசிய ஃபுல் லெந்த் பந்திற்கு கிரீசில் உள்ளே நின்று லேட் கட் ஆடுகிறேன் என்று பாயிண்டில் சவுமியா சர்க்காரிடம் ‘இதோ நான் உன் கையில் தருகிறேன் நீ நகர வேண்டாம்’ என்பது போல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்களில் மிட் ஆஃப் மேல் அடிக்கிறேன் என்று கேட்ச் ஆனார். அக்சர் படேல் வந்தார் சென்றார். 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் என்று இந்திய அணி கொஞ்சம் தடுமாறியது. அதன் பிறகுதான் ஜாகர் அலி, ராகுலுக்கு பவுண்டரி அருகே கையில் வந்த கேட்சை விட்டார். அந்தக் கேட்சை எடுத்திருந்தால் 20 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் இந்திய அணி தோற்றுக் கூட போயிருக்கலாம். அதுதான் அதிர்ஷ்டம் என்பது. இந்த வெற்றி அதிர்ஷ்டத்தினால் வந்தது. ஆனால் ஷுப்மன் கில் மெதுவான சதத்தை எடுத்தாலும் வெற்றியை உறுதி செய்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x