Published : 21 Feb 2025 09:44 AM
Last Updated : 21 Feb 2025 09:44 AM
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சவுமியா சர்க்கார் 0, மெஹிதி ஹசன் 5 ரன்களில் முகமது ஷமி பந்திலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷித் ராணா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 25 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையிலும், முஸ்பிகுர் ரகிம் ரன் ஏதும் எடுக்காமலும் அக்சர் படேல் பந்தில் நடையை கட்டினர். 8.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய வங்கதேச அணியை தவ்ஹீத் ஹிரிடோய், ஜாகர் அலி ஜோடி நிதானமாக செயல்பட்டு சரிவில் இருந்து மீட்டது.
தனது 2-வது அரை சதத்தை கடந்த ஜாகர் அலி 114 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். தவ்ஹீத் ஹிரிடோய், ஜாகர் அலி ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 206 பந்துகளில் 154 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் வங்கதேச அணி ஆட்டம் கண்டது. ரிஷாத் ஹொசைன் 18, தன்ஸிம் ஹசன் சாகிப் 0, தஸ்கின் அகமது 3 ரன்களில் நடையை கட்டினர்.
குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசிய தவ்ஹீத் ஹிர்டோய் 114 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது. அபாரமாக விளையாடிய தவ்ஹீத் ஹிர்டோய் 118 பந்துகளில், 100 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழக்க வங்கதேச அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5, ஹர்ஷித் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
229 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். ரோஹித் சர்மா 36 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசிய நிலையில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி 38 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் லெக் ஸ்பின்னரான ரிஷாத் ஹொசைன் பந்தில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8 ரன்களில் நடையை கட்டினர்.
30.1 ஓவரில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ஷுப்மன் கில்லுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். தொடக்கத்தில் நிதானமாக செயல்பட்ட கே.எல்.ரகுல் 9 ரன்களில் இருந்த போது ஸ்கொயர் லெக் திசையில் கொடுத்த எளிதான கொடுத்த கேட்ச்சை ஜாகர் அலி தவறவிட்டார். இதன் பின்னர் கே.எல்.ராகுல் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். மறுபுறம் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 125 பந்துகளில், 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 8-வது சதமாக அமைந்தது.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. தன்ஸிம் ஹசன் சாகிப் வீசிய 47-வது ஓவரின் 3-வது பந்தை கே.எல்.ராகுல் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 129 பந்துகளில், 101 ரன்களும் கே.எல்.ராகுல் 47 பந்துகளில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 புள்ளிகளை பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
‘விரைவாக 200’: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அவர், தனது 3-வது விக்கெட்டாக ஜாகர் அலியை ஆட்டமிழக்கச் செய்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஷமியின் 200-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் விரைவாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார்.
இந்த மைல்கல் சாதனையை ஷமி 104-வது ஆட்டத்தில் எட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் அஜித் அகர்கர் 133 ஆட்டங்களில் 200 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இந்த வகை சாதனையில் உலக அரங்கில் 34 வயதான ஷமி 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 102 ஆட்டங்களில் 200 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
60: உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். இதுவரை அவர், 60 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ஜாகீர் கான் (59 விக்கெட்கள்) முதலிடத்தில் இருந்தார்.
‘பிடி மன்னன்’: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்ச்கள் செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் செய்திருந்த முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 156 கேட்ச்கள் செய்துள்ளனர்.
குறைந்த பந்துகளில்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளை வீசி 200 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் முகமது ஷமி படைத்துள்ளார். அவர், 5,126 பந்துகளில் இந்த மைல் கல் சாதனையை எட்டியுள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 5,240 பந்துகளில் 200 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
‘ரோஹித் 11 ஆயிரம்’: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 13 ரன்களை எடுத்திருந்த போது இந்த மைல் கல் சாதனையை எட்டினார். மேலும் 11 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். அவர், 261 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இந்த வகையில் விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
‘மிஸ்ஸான ஹாட்ரிக்’: 9-வது ஓவரை வீசிய இந்திய ஆல்ரவுண்டரான அக்சர் படேல் 2-வது பந்தில் தன்ஸித் ஹசனையும், 3-வது பந்தில் முஸ்பிகுர் ரகிமையும் (0) ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த பந்தில் ஜாகர் அலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் கொடுத்த எளிதான கேட்ச்சை சிலிப் திசையில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். இதனால் அக்சர் படேல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது. கேட்ச்சை தவறவிட்ட ரோஹித் சர்மா தரையில் கை ஓங்கி 3 முறை அடித்தார். தொடர்ந்து கேட்ச்சை தவறவிட்டதற்காக அக்சர் படேலிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார். இது ரசிகர்களை நெகிழச் செய்தது.
24 ரன்னில் தப்பித்த ஹிரிடோய்: வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் தவ்ஹீத் ஹிரிடோய் 24 ரன்களில் இருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் மிட் ஆஃப் திசையில் கொடுத்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா தவறவிட்டார். இந்த வாய்ப்பை தவ்ஹீத் ஹிரிடோய் சரியாக பயன்படுத்திக் கொண்டு 100 ரன்கள் சேர்த்து அணிக்கு பெரிதும் உதவினார்.
‘0 முதல் 68’: ஜாகர் அலி 24 ரன்களில் இருந்த போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றார். பந்து மட்டையில் படாத நிலையில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வசம் சென்றது. ஆனால் அதை அவர். பிடித்து ஸ்டெம்பிங் செய்ய தவறினார். 2-வது முறையாக தப்பித்த ஜாகர் அலி நிதானமாக 68 ரன்கள் அடித்தார். அவர், ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னர் கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா தவறவிட்டிருந்தார்.
இன்றைய ஆட்டம்: ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா
இடம்: கராச்சி | நேரம்: பிற்பகல் 2:30 | நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT