Published : 20 Feb 2025 06:23 PM
Last Updated : 20 Feb 2025 06:23 PM
துபாய்: நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் பதிவு செய்தது வங்கதேசம். இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் தவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி அனிக் இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் நழுவவிட்ட கேட்ச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை அக்சர் படேல் மிஸ் செய்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.19) தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. பனிப்பொழிவு காரணமாக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லியிருந்த நிலையில் மாற்று முடிவை எடுத்தது வங்கதேசம்.
அந்த அணி 8.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. சவுமியா சர்க்கார், கேப்டன் நஸ்முல் ஹொசைன் ஷான்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர் அக்சர் படேல் வீசிய 9-வது ஓவரில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அடுத்த பந்தில் ஜாக்கர் அலி பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப் ஃபீல்டராக நின்ற கேப்டன் ரோஹித் வசம் சென்றது. அதை கேட்ச் பிடித்திருந்தால் அக்சர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருப்பார். அதை ரோஹித் மிஸ் செய்தார். கிட்டத்தட்ட ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் அதை சொல்லலாம்.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜாக்கர் அலி, தவ்ஹித் ஹ்ரிடோய் உடன் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 43-வது ஓவரில் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜாக்கர் அலி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த தவ்ஹித் ஹ்ரிடோய் சதம் விளாசினார். அவர் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த இன்னிங்ஸில் வங்கதேச அணி விரைந்து ஆல் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. 5 விக்கெட்டுகளில் முதல் 10 ஓவர்களுக்குள் இழந்த நிலையில் கடைசி ஓவர் வரை அந்த அணி விளையாடி அசத்தியது. 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் மட்டுமல்லாது 20-வது ஓவரில் ஹ்ரிடோய் கொடுத்த கேட்ச்சை மிட்-ஆஃப் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா நழுவவிட்டார். அப்போது ஹ்ரிடோய் 23 ரன்களில் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 229 ரன்கள் தேவை.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5, ஹர்ஷித் ராணா 3 மற்றும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தனர். இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறாதது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tanzid
— Star Sports (@StarSportsIndia) February 20, 2025
Mushfiqur
Hattrick... Well, almost!
Start watching FREE on JioHotstar: https://t.co/dWSIZFgk0E#ChampionsTrophyOnJioStar #INDvBAN, LIVE NOW on Star Sports 1 & Star Sports 1 Hindi! pic.twitter.com/5mn6Eqivci
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT