Published : 20 Feb 2025 12:42 PM
Last Updated : 20 Feb 2025 12:42 PM

“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” - மனம் திறந்த மகேந்திர சிங் தோனி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் அவர் களமாட உள்ளார். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்வில் தோனி கலந்து கொண்டார்.

“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-ல் நான் ஓய்வு பெற்றேன். கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். அதை இன்னும் சில ஆண்டுகள் தொடர விரும்புகிறேன். என்னால் முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எப்படி நான் பள்ளி பருவத்தில் கிரிக்கெட்டை விரும்பி விளையாடினேனோ அதே போல இப்போதும் விளையாட விரும்புகிறேன். நாங்கள் தங்கியிருந்த காலனியில் மாலை 4 மணி என்பது விளையாட்டுக்கான நேரம். நாங்கள் அதிகம் கிரிக்கெட் தான் விளையாடுவோம். வானிலை ஒத்துழைக்கவில்லை என்றால் கால்பந்து ஆடுவோம். அப்போதிருந்த அதே வெகுளி தன்மையுடன் இப்போது விளையாட விரும்புகிறேன். இதனை செய்வதை விட சொல்வது எளிது.

தேசத்துக்காக சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனால் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென நான் எப்போதும் எண்ணுவேன். அதனால் எனக்கு எப்போதும் கிரிக்கெட் தான் முதலானது. மற்ற அனைத்தும் அதற்கு அடுத்து தான். எந்த நேரத்தில் நமக்கு எது சரி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

எல்லோரிடமும் எப்படி பழகினேன் என்பதன் மூலம் நான் ஒரு நல்ல மனிதனாக நினைவுகூரப்பட விரும்புகிறேன். அடுத்தவரை மன்னிக்கும் சக்தி நம்மில் பலருக்கு இல்லை. வாழ்க்கையில் பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக ஆகிவிட்டோம். நம்மை யாரோ ஒருவர், ஏதோ சொன்னார் என்பதற்காக நாமும் அவரை ஏதேனும் சொல்ல வேண்டும் என்று இல்லை. மன்னியுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்” என தோனி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x