Published : 20 Feb 2025 07:49 AM
Last Updated : 20 Feb 2025 07:49 AM
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது.
8 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது. அதேவேளையில் நஸ்முல் ஹாசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியானது ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்த நிலையில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் பார்முக்கு திரும்பி இருந்தனர். ரோஹித் சர்மா சதம் விளாசிய நிலையில் விராட் கோலி 70 ரன்களுக்கு மேல் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இது கடைசி ஐசிசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தொடரில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தக்கூடும்.
இங்கிலாந்து தொடரில் ஒரு சதம், 2 அரை சதம் என 250 ரன்களுக்கு மேல் குவித்திருந்த ஷுப்மன் கில் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோன்று நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் பலம் சேர்க்கக்கூடும். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணியின் பலம் அதிகரிக்கும். கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரிஷப் பந்த் இடம் பெறுவது கடினம்.
வேகப்பந்து வீச்சில் முகமது ஷமியுடன், அர்ஷ்தீப் சிங் இடம் பெறக்கூடும். 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா செயல்படுவார். 3-வது சுழற்பந்து வீச்சாளரக இடம் பெறுவதில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோரிடையே போட்டி நிலவக்கூடும். ஒருவேளை இந்திய அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
நஸ்முல் ஹாசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபகாலமாக சிறந்த பார்மில் இல்லை. எனினும் அந்த அணி ஐசிசி தொடர்களில் முன்னணி அணிகளுக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
அணி விவரம் - இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
வங்கதேசம்: நஸ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), சவுமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மூத் உல்லா, ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்டாபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹோசாய் எமோன், நசும் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா.
‘எந்த அணியையும் வீழ்த்த முடியும்’: வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறும்போது, “ ஆல்ரவுண்டர்கள் எப்போதும் அணியை சமநிலைப்படுத்துகிறார்கள், எங்களிடம் சில நல்ல ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அவர்கள், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் எங்கள் அணி மிகவும் சமநிலையானது, சாம்பியன்ஸ் டிராபி தொடரை எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அனைத்து அணிகளும் இந்த கோப்பையை வெல்லும் திறன் கொண்டவை, ஆனால் நான் எதிரணியைப் பற்றி அதிகம் சிந்திக்காத நபர். எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் எந்த நாளிலும் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களிடம் சில தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இப்போது நஹித் ராணா, தஸ்கின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” எனறார்.
‘பலத்திற்கு ஏற்ப விளையாடுகிறோம்’: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் ஆல்ரவுண்டர்கள். அவர்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச முடியும். நாங்கள் எங்கள் பலத்திற்கு ஏற்ப விளையாடுகிறோம். மூன்று ஆல்ரவுண்டர்களும் அணிக்கு வெவ்வேறு பரிமாணத்தை அளிக்கிறார்கள், அவர்கள் அணிக்கு நிறைய பலம் சேர்க்கிறார்கள். ஒன்றுக்குப் பதிலாக இரண்டு திறன்களைக் கொண்ட வீரர்களைக் கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோர். மற்ற ஐசிசி தொடர்களை போலவே இதுவும் மிக முக்கியமான தொடர். கோப்பையை கைப்பற்ற நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்ய வேண்டும்" என்றார்.
மைதானத்தில் இந்திய கொடி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று (19-ம் தேதி) தொடங்கியது. பொதுவாக போட்டி நடைபெறும் மைதானங்களில் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் கொடிகள் ஏற்றப்படு வதுவழக்கம். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாகூர் மைதானத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் இந்திய தேசியக் கொடி இடம் பெறவில்லை. இது சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று கராச்சியில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது மைதானத்தில் இந்திய தேசிய கொடி பறந்தது.
நேரம்: பிற்பகல் 2.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT