Published : 19 Feb 2025 08:35 AM
Last Updated : 19 Feb 2025 08:35 AM
கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உள்ளன.
பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தொடரின் தொடக்க ஆட்டத்தில் இன்று (19-ம் தேதி) பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் கராச்சியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் களமிறங்குகிறது. தொடக்க வீரராக பாபர் அஸம் களமிறங்குவார் என ரிஸ்வான் தெரிவித்துள்ளார். முத்தரப்பு தொடரில் 219 ரன்கள் குவித்த சல்மான் அலி அகா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொந்த மண்ணில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் மாயங்கள் நிகழ்த்தினால் மட்டுமே சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய முடியும்.
2000-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நியூஸிலாந்து மிட்செல் சாண்ட்னர் தலைமையில் விளையாடுகிறது. அந்த அணியில் பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களமிறங்கக்கூடியவர் வரை நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்வது பலமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் விளையாடும் லெவனில் 8 பேர் (ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெறும் பட்சத்தில்) பந்து வீசும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நியூஸிலாந்தைவிட அதிக ஆட்டங்களில் விளையாடி வெளிநாட்டு அணி வேறு ஏதும் இல்லை. இந்த வகையில் நியூஸிலாந்து அணி அங்கு 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து வென்றிருந்தது. இந்தத் தொடரில் அந்த அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், இறுதிப் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது நியூஸிலாந்து அணி.
அந்த அணியில் சுழற்பந்து வீச்சை சீர்குலைக்க கூடிய வகையிலான பேட்டிங் நியூஸிலாந்து வசம் இருப்பதும் கூடுதல் பலம். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் ஆகியோர் சுழலுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இதில் வில்லியம்சன், முத்தரப்பு தொடரில் 3 ஆட்டங்களில் 112.50 சராசரியுடன் 225 ரன்கள் குவித்திருந்தார்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகி உள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லாக்கி பெர்குசன், பென் சீயர்ஸ் ஆகியோர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் மேட் ஹென்றியை சார்ந்தே பந்துவீச்சு இருக்கக்கூடும். வில் ஓ’ரூர்க், ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் ஆகியோர் கைகொடுத்தால் பலம் அதிகரிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னருடன் மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ரச்சின் ரவீந்திரா காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதியை எட்டும் நிலையில் உள்ளார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.
அணி விவரம் - பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அஸம், ஃபகர் ஜமான், சல்மான் அலி அகா, கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி.
நியூஸிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லேதம், வில் யங், கிளென் பிலிப்ஸ், நேதன் ஸ்மித், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, வில் ஓ'ரூர்க், ஜேக்கப் டஃபி.
இந்திய ஆட்டங்கள்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (20-ம் தேதி) வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
29 வருடங்களுக்கு பிறகு: பாகிஸ்தானில் 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தது.
‘எல்லாம் நெருக்கடி’: பாகிஸ்தான் அணியின் கேட்டன் முகமது ரிஸ்வான் கூறும்போது, "அழுத்தத்தின் கீழ் போட்டிகளை வெல்ல தேவையான செயல் திறன் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் எங்களிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அழுத்தத்தின் கீழ் உடைந்து விடுகிறோம். சமீபத்திய ஆட்டங்களில் நாங்கள் கண்டதைப் போல நெருக்கமான போட்டிகளை இழந்துள்ளோம். நியூஸிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறையாக தோல்வி அடையமாட்டோம் என்ற நம்பிக்கை உள்ளது. முத்தரப்பு தொடரில் செய்த தவறுகளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செய்யாமல் இருக்க முயற்சி செய்வோம்" என்றார்.
இதுவரை சாம்பியன்கள்
நேரம்: பிற்பகல் 2.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT