Last Updated : 18 Feb, 2025 08:07 AM

 

Published : 18 Feb 2025 08:07 AM
Last Updated : 18 Feb 2025 08:07 AM

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை எதிர்க்கும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

லீக் சுற்று மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் இறுதிப் போட்டி 9-ம் தேதியும் நடைபெறுகின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தொடரின் தொடக்க ஆட்டத்தில் நாளை (19-ம் தேதி) பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் கராச்சியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் பலம், பலவீனம், வாய்ப்புகள் குறித்து ஓர் அலசல்..

வங்கதேசம் - பலம்: 50 ஓவர் கிரிக்கெட்டில்தான் வங்கதேசம் வலுவாக உள்ளது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி, 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் விளையாடி இருந்தது. மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சவுமியா சர்க்கார், தன்சிம் ஹசன் சாகிப், துணை கேப்டன் மெஹிதி ஹசன் மிராஜ் போன்றோர் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.

பலவீனம்: தொடர்ச்சியான செயல் திறன் இல்லாதது வங்கதேச அணியின் சாபக்கேடாக உள்ளது. பவர் பிளேவில் சிறப்பாக செயல்படக்கூடிய லிட்டன் தாஸ், அனுபவம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

வாய்ப்புகள்: துபாய் ஆடுகளங்களில் சற்று மந்தமாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களான மெஹிதி ஹசன், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். அனுபவம் வாய்ந்த முஸ்டாபிஸுர் ரஹ்மானும் வேகப்பந்து வீச்சில் போதுமான வேறுபாடுகளை காட்டக்கூடியவர்.

அச்சுறுத்தல்: வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் (ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக) 5-ல் தோல்வி அடைந்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் சர்வதேச தரத்தில் தீப்பொறியை ஏற்படுத்தக்கூடிய அளவிலா மட்டை வீச்சு இல்லை. மேலும் கடினமான சூழ்நிலையில் இருந்து அணியை மீட்டெடுக்கக்கூடிய எக்ஸ் காரணி வீரர்கள் இல்லை.

பாகிஸ்தான் - பலம்: அணித் தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன, ஆனால் போட்டியின் தினத்தில் அபாயகரமாக திகழக்கூடிய வீரர்கள் அணியில் உள்ளனர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஃபகார் ஜமான் மட்டை வீச்சில் முக்கிய பங்காற்றினார். அவர், பாபர் அசாமை விட ஆபத்தானவர். கேப்டன் முகமது ரிஸ்வான், பினிஷர் ஆகா சல்மான் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் உடற்தகுதியை எட்டி உள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

பலவீனம்: தொடக்க வீரரான சைம் அயூப் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் பாபர் அஸம் சிறந்த பார்மில் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் அவர், 3 ஆட்டங்களில் கூட்டாக 62 ரன்களே சேர்த்தார். கம்ரன் குலாம், குஷ்தில் ஷா, தயாப் தாஹிர் ஆகியோரு செயல் திறன் இதுவரை முழுமையாக வெளிப்படவில்லை.

வாய்ப்புகள்: சொந்த மண்ணில் விளையாடுவது நிச்சயம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும். அவர்கள், வலுவான வேகப் பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டுள்ளனர். ஆனால் ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப் ஆகியோருக்கு கராச்சி மற்றும் ராவல்பிண்டி மைதானங்கள் கைகொடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் ஆகா சல்மானின் ஃபார்ம் பெரிய பிளஸ், மிடில் ஓவர்களில் இறுக்கமான ஆஃப் பிரேக்குகளை அவரால் வீச முடியும். இதனால் ஆகா சல்மான் இந்த தொடரில் பாகிஸ்தானின் எக்ஸ் காரணியாக ஆக இருப்பார்.

அச்சுறுத்தல்கள்: பிரதான சுழற்பந்து வீச்சாளராக அப்ரார் அகமது மட்டுமே உள்ளார். ஆகா சல்மான் கைகொடுக்கக்கூடியவர் என்றாலும் அவர், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்தான். ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரப்பின் பேட்டிங் சராசரியோ, பந்துவீச்சு எகானமி ரேட்டோ நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. முத்தரப்பு தொடரில், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் அதிக ரன்களை வாரி வழங்கினர்.

நியூஸிலாந்து - பலம்: துணைக் கண்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் போதுமான அனுபவம் கொண்ட நிறைய வீரர்களைக் கொண்ட மிகவும் கச்சிதமான அணிகளில் ஒன்று நியூஸிலாந்து. டேவன் கான்வே, டாம் லாதம் தொடக்க பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் ஆட்டத்தின் போக்கை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர். மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தங்களது தாக்குதல் ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பலவீனம்: நீண்ட காலத்திற்குப் பிறகு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் இல்லாமல் நியூஸிலாந்து அணி ஐசிசி தொடரில் விளையாட உள்ளது. லாக்கி பெர்குசனை தவிர அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. பாகிஸ்தான், துபாய் ஆடுகளங்களில் பந்து வீசுவதற்கான திறன்கள் சேனா (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளிலிருந்து வேறுபட்டது. இதனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

வாய்ப்புகள்: ஐசிசி தொடர்களில் நியூஸிலாந்து அணி எப்போதும் முதல் 4 இடங்களுக்குள் இருக்கும். இம்முறையும் இதற்கு விதிவிலக்கு இருக்காது என்றே கூறப்படுகிறது. கேப்டன் மிட்செல் சாண்ட்னருடன் நடுஓவர்களில் கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் ஆகியோர் ஆட்டத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும். ஏனெனில் இந்த பகுதி ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடியது.

அச்சுறுத்தல்கள்: மிடில் ஓவர்களில் எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களை நியூஸிலாந்து எப்படி எதிர்கொள்கிறது என்பதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், வில் யங் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்ட நுட்பத்தின் சரியான கலவையைக் காட்டினார். பாகிஸ்தான், துபாய் ஆடுகளங்கள் தட்டையாக இருக்கும். இங்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், வங்கதேசத்தின் ரிஷாத், பாகிஸ்தானின் அப்ராருக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு சிறப்பு திறன்கள் தேவைப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x