Published : 17 Feb 2025 07:56 PM
Last Updated : 17 Feb 2025 07:56 PM

கராச்சியில் பறக்காத இந்திய கொடி: சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் புதன்கிழமை (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நாட்டின் கொடியை தவிர்த்து தொடரில் பங்கேற்கும் மற்ற 7 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்ட வீடியோ ஒரு சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘பாகிஸ்தான் வேண்டுமென்றே இதை செய்துள்ளது’ என கூறியுள்ளனர். பாகிஸ்தானில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் பாதுகாப்பு காரணமாக அங்கு பங்கேற்று விளையாட முடியவில்லை. அதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதி செய்துள்ளன.

இரு நாட்டு அணிகளும் கடந்த 2012-13க்கு பிறகு நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருந்தது. அதன் பின்னர் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. கடந்த 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்று விளையாடியது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஓர் ஒப்பந்தமிட்டுள்ளன. அதில் ஐசிசி தொடர்களை இந்தியா அல்லது பாகிஸ்தான் நடத்தினால் அந்த தொடரில் இந்த இரு அணிகள் ஆடும் போட்டிகள் மட்டும் இரு தரப்புக்கும் இடையே நியூட்ரலாக உள்ள மைதானத்தில் நடைபெறும் என்பதுதான் ஒப்பந்தம். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது.

இந்த நிலையில்தான் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளின் கொடிகள் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கொதிப்படைய செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்: “பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவில்லை. இது அனைவரும் அறிந்தது. அதன்படி இந்த தொடரில் போட்டிகள் நடைபெற உள்ள கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ள அணிகளின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

இதோடு போட்டிகள் நடைபெறும் நாளன்று மைதானத்தில் 4 கொடிகள் மட்டும் இருக்க வேண்டுமென ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், தொடரின் ஏற்பாட்டாளர் ஐசிசி மற்றும் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கொடிகள் மட்டுமே இருக்க வேண்டும். அதைதான் செய்துள்ளோம்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x