Published : 17 Feb 2025 04:48 PM
Last Updated : 17 Feb 2025 04:48 PM
இன்றைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கென்று பொதுத் தொடர்பு முகவர்களை, நிறுவனங்களை தங்களது விளம்பரங்களுக்காக வைத்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் அத்தகைய பி.ஆர்.கள் இல்லாத ஒரு நட்சத்திர வீரர் இருக்கிறார் என்றால் அது அஜிங்கிய ரஹானேதான்.
சமீபத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கடுமையாகக் கூறியபோது, ‘பிசிசிஐ முதலில் வீரர்கள் பி.ஆர் ஏஜெண்ட்களை வைத்துக் கொள்வதைத் தடை செய்ய வேண்டும்’ என்று மிக மிக முக்கியமான ஆலோசனையை அவசியமானதென்று வலியுறுத்தினார்.
இந்த பி.ஆர்.ஏஜெண்ட்கள்தான் கோலி, ரோஹித் சர்மாக்கள், ஷுப்மன் கில்கள், பாண்டியாக்கள் எத்தனை சொதப்பினாலும் அவர்கள் அடித்த சிக்ஸ், பவுண்டரி, 25 ரன்கள், 50 ரன்கள் என்று ஏதோ நடவாதது நடந்தது போல் கூவுகின்றனர். காசு கொடுத்து பல மீடியாக்களை கூவ வைக்கின்றனர்.
இந்நிலையில், அஜிங்கிய ரஹானே தன் கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும் கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.
“நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட்தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது நாம் வாயைத் திறந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக எழுந்துள்ளது. நான் பேசியாக வேண்டும்.
என்னுடைய கடின உழைப்பைப் பற்றி நான் பேசியாக வேண்டும். அனைவரும் நான் செய்தியில் அடிக்கடி இடம்பெற வேண்டும், செய்தியாக வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னிடம் பி.ஆர். டீம் இல்லை, என் ஆட்டம்தான், என் கிரிக்கெட் தான் என் பி.ஆர். ஆனால் இப்போது புரிகிறது, நான் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பது முக்கியமாகப்படுகிறது. இல்லையெனில் நான் இந்த கிரிக்கெட் வட்டத்திலேயே என்று நினைத்து விடுகிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்த எனது ஆர்வம்தான் என்னை இன்னமும் தக்க வைக்கிறது. இப்போது மும்பை அணிக்காக என் அனைத்தையும் அளித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன், ஆனால் பிறகு ரஞ்சி டிராபி ஆட்டம் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மீண்டும் அணியில் அழைக்கப்பட்டேன். ஆனால் மீண்டும் நீக்கப்பட்டேன். என் கையில் இருப்பது கிரிக்கெட் மட்டுமே.
தென் ஆப்பிரிக்கா தொடர் கடினமானது. எனக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று நினைத்தேன்; ஆனால் தேர்வு செய்யவில்லை/ நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடிய எனக்கு இது காயத்தை ஏற்படுத்துகிறது.
என்னை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள் என்று தேர்வாளர்களிடம் சென்று கேட்கக் கூடியவன் அல்ல நான். எல்லோரும் போய் பேசு என்கின்றனர். ஆனால் எதிர்தரப்பில் பேசத் தயாராக இல்லை எனும்போது நான் மட்டும் எப்படி பேச முடியும்? ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச விரும்புகிறேன். நான் டெக்ஸ்ட் மெசேஜ் எல்லாம் அனுப்ப மாட்டேன். என் கையில் மட்டையைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவே இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்திய அணிக்குத் திரும்புவேன்” என்று கூறினார் அஜிங்கிய ரஹானே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT