Published : 17 Feb 2025 04:15 PM
Last Updated : 17 Feb 2025 04:15 PM
பிப்ரவரி 17, 1982... 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கியது. இலங்கை அணியின் கேப்டன் பந்துலா வர்ணபுரா. இவர் தொடக்க வீரரும் கூட, இங்கிலாந்து கேப்டன் அனுபவமிக்க கீத் பிளெட்சர்.
இந்திய அளவில் அப்போது குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இலங்கை அணி பிரபலம். ஏனெனில் அப்போதெல்லாம் எம்.ஜே.கோபாலன் டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - இலங்கை அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும். இதற்கான நேரலை வர்ணனையும் வானொலிகளில் ஒலிபரப்பான காலக்கட்டம் அது. எனவே, அப்போது துலிப் மெண்டிஸ், ராய் டயஸ், கல்லுபெருமா, சிதாத் வெட்டிமுனி, ரஞ்சன் மதுகள்ளே, ரவி ரத்னாயகே போன்ற வீரர்கள் தமிழ்நாட்டில் பிரபலமானவர்களே.
இந்நிலையில், முதல் டெஸ்ட் என்றவுடன் தமிழக ரசிகர்களுக்கு இலங்கை அணி மீது ஓர் ஆர்வம் இருந்தது. இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் தமிழ் வர்ணனையும் மேற்கொள்ளப்பட்டது. ‘பூவா தலையா வென்று இலங்கை முதலில் துடுப்பெடுத்து ஆட முடிவு செய்துள்ளது’ என்று ‘பேட்டிங்’ என்பதற்கு துடுப்பெடுத்து ஆடுவது என்பது டெஸ்ட் தமிழ் வர்ணனையில் புழக்கத்திற்கு வந்தது.
ஆகவே, தமிழ் வர்ணனைக்கு ஒரு நல்ல பின்னணி உள்ளது. இன்றைய மோசமான தமிழ் வர்ணனைகளைக் கேட்கும் போது தமிழ் வர்ணனையின் பொற்காலத்தை நினைக்காமல் இருக்க முடியாது. இங்கு தமிழில் ராமமூர்த்தி, கூத்தபிரான், அப்துல் ஜப்பார் போன்றோரின் அழகிய தமிழில் வர்ணனைகளைக் கேட்டு விட்டு இப்போதைய அடா புடா தமிழ் வர்ணனை காதுகளைக் கூசச் செய்கிறது.
அர்ஜுனா ரணதுங்கா என்னும் உலகக் கோப்பை வெற்றி கேப்டன் உதயம்: இந்த டெஸ்ட்டில் 18 வயது இளம் பாலகனாக அர்ஜுனா ரணதுங்கா இடது கை பேட்டராக அறிமுகமானார். ரணதுங்கா 14 வயதுக்குட்பட்டோர் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேட்டிங்கில் 315 ரன்களையும், பவுலிங்கில் 24 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலங்கையின் முதல் அறிமுக டெஸ்ட்டில் தானும் அறிமுக வீரராகக் களமிறங்கிய ரணதுங்கா 34/4 என்ற நிலையிலிருந்து அணியை மீட்டார். அதுவும் கிரீசுக்கு வந்தவுடனேயே பாப் வில்லிஸ் ஒரு எகிறு பந்தை வீசி வரவேற்றார். ஆனால், அதன் பிறகு அவரது உறுதியும் கால்நகர்த்தல்களும் இலங்கையின் முதல் அரைசத நாயகனாக்கியது.
96 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்து ரஞ்சன் மதுகள்ளேவுடன் (65) 99 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க இலங்கை முதல் இன்னிங்சில் 218 ரன்களை எடுத்தது. ரஞ்சன் மதுகள்ளே இலங்கை அணியின் முதல் டெஸ்ட் சிக்ஸரை விளாசினார், இவர் இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜான் எம்ப்யூரேவை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் விளாசினார். டெரிக் அண்டர்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை அணியில் அப்போது வேகப்பந்து வீச்சாளராக கொஞ்சம் பிரபலமாகியிருந்தார் அசந்தா டி மெல். நல்ல கட்டுமஸ்தான உடலுடன் கூடிய கம்ப்யூட்டர் புரோகிராமர் இவர். நல்ல புத்துணர்வுடன் வீசியதில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் கிரகாம் கூச், ஜெஃப் குக், கிரிஸ் டாவரே, இயன் போத்தம் போன்ற டாப் ஆர்டரைக் காலி செய்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 40/3 என்று வழிந்து கொண்டிருந்தது, அப்போது டேவிட் கோவர் (89), கீத் பிளெட்சர் (45), விக்கெட் கீப்பர் பாப் டெய்லர் (31) ஆகியோர் பழுது வேலைகளைப் பார்க்க இங்கிலாந்து 223 ரன்களை எடுத்து 5 ரன்கள் முன்னிலை பெற்றது. அசந்தா டிமெல் 4 விக்கெட்டுகள். லெக் ஸ்பின்னர் சோமச்சந்திர டிசில்வா 3 விக்கெட்.
8 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த இலங்கை: 2-வது இன்னிங்ஸில் ராய் டயஸ் ஒரு அதியற்புதமான இன்னிங்ஸை ஆடினார். 128 பந்துகளில் 77 ரன்களை அவர் 11 பவுண்டரிகளுடன் எடுத்தார். துலிப் மெண்டிஸ் 27, கேப்டன் பந்துல வர்ணபுரா 38 என்று இலங்கை 167/3 என்று நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு சற்றும் எதிர்பாராதது நடந்தது. இலங்கை ஆஃப் ஸ்பின்னர் ஜான் எம்பியுரேவிடம் வரிசையாக இலங்கை பேட்டர்கள் மார்ச்ஃபாஸ்ட் செய்ய அடுத்த 8 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜான் எம்பியுரே 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
171 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி 58.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து எடுத்து அபார வெற்றி பெற்றது. கிறிஸ் டாவவே, அசந்தா டி மெல் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கினாலும் 85 ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தார். அப்போது தொடங்கிய டெஸ்ட் பயணத்தில் தன் முதல் டெஸ்ட் வெற்றியை 3 ஆண்டுகள் சென்று 1985-ல் கொழும்புவில் இந்திய அணிக்கு எதிராக பெற்றது. ஏகப்பட்ட நடுவர் தீர்ப்பு சர்ச்சைகளை இந்த டெஸ்ட் வெற்றி எழுப்பியது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள இலங்கை அணி, அதில் 100 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது.
அப்போது உதயமான இளம் வீரர் அர்ஜுனா ரணதுங்கா கேப்டனாகி 1996 உலகக் கோப்பையை இலங்கைக்குப் பெற்றுத் தந்ததோடு, இலங்கை அணியை உலக அணிகளை வீழ்த்தும் ஓர் அச்சுறுத்தும் அதிரடி அணியாக மாற்றியதுதான் அவரது சாதனை.
ஒருமுறை சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் கஷ்டப்பட்டு வென்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேள்வியாளர், ‘இலங்கைக்கு எத்தனை ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் சரியாக இருக்கும்?’என்று கேள்வி எழுப்ப, சச்சின் அதற்கு ‘ஒருவேளை ஆயிரம் ரன்கள் சரியாக இருக்கும்’ என்றார்.
அந்த அளவுக்கு உலகை அச்சுறுத்தும் அணியாக இலங்கையை மாற்றிய அர்ஜுனா ரணதுங்காவின் அறிமுகப் போட்டி, இலங்கையின் டெஸ்ட் அறிமுகப் போட்டி நம் நினைவுகளில் நீங்கா இடம்பெற போதமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT