Published : 15 Feb 2025 12:55 PM
Last Updated : 15 Feb 2025 12:55 PM
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஒரு விளையாட்டு வீரராக மட்டுமே கருத வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்குள் இத்தகைய சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நீள் நெடுங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கபில்தேவ் சூப்பர் ஸ்டார் என்றால், அவர் உண்மையில் சூப்பர் ஸ்டாராகவே விளையாட்டில் திகழ்ந்தார். ஆனால் ஐபிஎல் வந்த பிறகே ஸ்பான்சர்களும், வீரர்களின் முகவர்களும் வணிக நோக்கங்களுக்காகவும் தங்களைச் சுற்றி ஒரு பெரிய ஒளிவட்டம் இருப்பதாகவும் ரசிகர்களை நம்ப வைப்பதோடு தானும் அதை நம்பவே செய்கின்றனர்.
இது அணித் தேர்வு முதல் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கி வருகிறது என்று பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அஸ்வினும் இத்தகைய உணர்வை பிரதிபலிக்குமாறு தன் கருத்தை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்துள்ளார்.
இது குறித்து இந்தி யூடியூப் சேனலில் அவர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை முதலில் இயல்பான நிலைக்குத் திருப்ப வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் இத்தகைய சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் சூப்பர் பிரபலங்கள் போன்ற கலாச்சாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதை ஊக்குவிக்கக் கூடாது.
முன்னோக்கிச் செல்கையில் இந்திய கிரிக்கெட்டில் அனைத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும்.
உதாரணமாக விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா என்றால் அவர்கள் நிறைய சாதித்து விட்டனர். எனவே அவர்கள் இன்னுமொரு சதம் எடுக்கிறார்கள் என்றால் அது ஏதோ இனி உங்கள் சாதனையல்ல. அது வழக்கமானது, நம் லட்சியங்கள், இலக்குகள் இந்த சாதனைகளை விட பெரியதாக இருக்க வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபிக்காக 5 ஸ்பின்னர்களா? இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து ஆல்ரவுண்டர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்களா? ஆகவே ஹர்திக் பாண்டியாவும் ஆடப்போகிறார், ஜடேஜா, அக்சர் படேலும் ஆடுவார்கள், குல்தீப் யாதவும் இருப்பார்.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியைச் சேர்க்க வேண்டுமெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உட்கார வைத்து விட்டு ஹர்திக் பாண்டியாவை 2வது வேகப்பந்து வீச்சாளராகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஸ்பின்னர் ஒருவரை ட்ராப் செய்து விட்டு 3வது வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு வர வேண்டும்” என்றார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT