Published : 15 Feb 2025 12:29 AM
Last Updated : 15 Feb 2025 12:29 AM
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, பஞ்சாப் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் எஃப்சி 19 ஆட்டங்களில் விளையாடி 24 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி 20 ஆட்டங்களில் விளையாடி 21 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி (31) அணியை விட சென்னையின் எஃப்சி அணிக்கு 10 புள்ளிகளும், பஞ்சாப் எஃப்சி அணி 7 புள்ளிகளும் பின்தங்கி உள்ளன. இரு அணிகளும் பிளே பிளே ஆஃப் சுற்றை நெருங்க வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும்.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி கடந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை வீழ்த்தியிருந்தது. கடந்த அக்டோபர் 31, 2024-ல் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது பஞ்சாப் எஃப்சி. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
எனினும் சென்னையின் எஃப்சி தனது சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தவில்லை. சென்னை நேரு விளையாட்டரங்கில் அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 2 டிராவையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
ஆனாலும் பஞ்சாப் எஃப்சியின் டிபன்ஸ் பலவீனத்தை பயன்படுத்தி சென்னையின் எஃப்சி அணி சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வகையில் வலுவான செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
இரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னையின் எஃப்சி ஒரு ஆட்டத்திலும், பஞ்சாப் எஃப்சி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT