Published : 14 Feb 2025 10:21 PM
Last Updated : 14 Feb 2025 10:21 PM
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்று (பிப்.14) நிறைவடைந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை உத்தராகண்ட் மாநிலம் சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். மேலும், 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தின் ஹல்துவானி நகரம் கோலாபூரில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. விளையாட்டுக்கான தேசிய வரைப்படத்தில் 25-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு உத்தராகண்ட் முன்னேற்றம் கண்டது அவரது ஆட்சியில் தான். ஆன்மிக பூமி இப்போது விளையாட்டு சாதனையாளர்கள் நிறைந்த பூமியாக அறியப்படுகிறது. இதற்கு காரணம் மண்ணின் மைந்தர்கள் (விளையாட்டு வீரர்கள்) தான். அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
தேசிய விளையாட்டு போட்டிக்காக உத்தராகண்ட் மாநிலம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் தேசிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளது. மாநிலத்தின் புவியியல் அமைப்பு சார்ந்த சவால்கள் இருந்தாலும் அதை திறன்பட கையாண்டுள்ளது முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அரசு. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பு. அதை கருத்தில் கொள்ளாமல் களமாடுங்கள் என விளையாட்டு வீரர்களுக்கு அவர் ஊக்கம் கொடுத்துள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டியின் போது வீரர்களின் சார்பாக மரம் நடும் பணியை மாநில அரசு முன்னெடுத்தது. இது சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையாகும். அடுத்த தேசிய விளையாட்டு போட்டியை நடத்த உள்ள மேகாலயா மாநிலத்துக்கு எனது வாழ்த்துகள். அது வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என கருதுகிறேன்.
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் அதற்கு சான்று. பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களின் தோழராக திகழ்கிறார். கடந்த 2014-ல் ரூ.800 கோடி என இருந்த விளையாட்டு துறைக்கான பட்ஜெட் 2025-26ல் ரூ.3,800 கோடியாக அதிகரித்துள்ளது. இது சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு வெற்றிக்கான வேட்கையை தணிக்கும் என நம்புகிறோம்.
2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார்: மலைகள் நிறைந்த சிறிய மாநிலமான உத்தராகண்டில் தேசிய விளையாட்டு போட்டியை சிறப்பாக நடத்தும் சூழலில் வரும் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியா திறம்பட நடத்த தயாராக உள்ளது என நம்புகிறோம். அதில் நம் வீரர்கள் தேசத்தை பெருமை கொள்ள செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.
நிறைவாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானில் மேற்கொண்ட வான்வழி தாக்குதல் எதிரிகளுக்கு தக்க பாடம் சொல்லி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையை மாற்றியதாகவும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தேசிய போட்டி மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது - உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி: 38-வது தேசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டதன் மூலம் உத்தராகண்ட் மாநிலம் அவர்களது ஆசியை பெற்றுள்ளது.
தேசிய விளையாட்டு போட்டியை மாநிலம் உதயமான 25-வது ஆண்டில் நடத்துவது பெருமை. இதில் 35 விளையாட்டுப் பிரிவுகளில் சுமார் 16,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். மொத்தம் 448 தங்கம், 448 வெள்ளி மற்றும் 594 வெண்கலப் பதக்கங்களை வீரர்கள் வென்றனர். தேசிய சாதனைகள் பல படைக்கப்பட்டன. வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் தங்கள் திறனை வெளிப்படுத்த இது உதவும் என நம்புகிறோம்.
முதல் முறையாக யோகா, மல்லர்கம்பம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் இதில் நடத்தப்பட்டனர். இரவு நேர ரிவர் ராஃப்டிங் போட்டியும் நடத்தப்பட்டது. மேலும், சூரிய சக்தி பயன்பாடு, மின்சார வாகன பயன்பாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், பதக்கங்களை மின்னணு கழிவிலிருந்து உருவாக்கியது, மறுசுழற்சி மூலமாக வீரர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கிட் உருவாக்கப்பட்டது, 2.77 ஹெக்டருக்கு சிறப்பு காடு உருவாக்கப்பட்டது, வெற்றி பெற்ற வீரர்களின் பெயரில் ருத்ராட்சை மரம் நடப்பட்டுள்ளது. மொத்தத்தில் பசுமையை போற்றும் வகையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் உத்தராகண்ட் மாநில விளையாட்டு வீரர்கள் 24 தங்கம் உட்பட மொத்தம் 103 பதக்கங்களை வென்றனர். தேசிய விளையாட்டு போட்டியில் தற்போது நிறைவு அடைந்திருந்தாலும் இது புதிய வாய்ப்புகளுக்கான திறவுகோலாக இருக்கும் என உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். அடுத்ததாக தேசிய விளையாட்டு போட்டியை நடத்த உள்ள மேகாலயா மாநிலத்துக்கு தனது வாழ்த்தினை அவர் தெரிவித்தார்.
38-வது தேசிய விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாழ்த்து தெரிவித்தார். மேலும், உத்தராகண்ட் மாநிலம் விளையாட்டுகளின் தலைநகரமாக மாற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மிகக் குறைவான நேரத்தில் போட்டிக்கான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் பணியை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பாராட்டினார்.
தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தனது பாராட்டினை தெரிவித்தார். இந்த நிறைவு விழாவில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, மத்திய இணை அமைச்சர் அஜய் தாம்டா, ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பட் மற்றும் எம்.பி. அஜய் பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்துக்கு 6-வது இடம்: 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடரில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியானா 48 தங்கம், 47 வெள்ளி, 58 வெண்கலம் என 153 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. தமிழ்நாடு அணி 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் 6-வது இடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய உத்தராகண்ட் 24 தங்கம், 35 வெள்ளி, 44 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 7-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT