Published : 14 Feb 2025 08:08 PM
Last Updated : 14 Feb 2025 08:08 PM
கொழும்பு: இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. ஆசியாவில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்த குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இலங்கை 174 ரன்களில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இன்று (பிப்.14) கொழும்பில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது அந்த அணி. குசால் மெண்டிஸ் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் அசலங்கா 78, நிஷான் 51 மற்றும் ஜனித் 32 ரன்கள் எடுத்தனர்.
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி விரட்டியது. இன்னிங்ஸ் தொடங்கியது முதலே சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஸ்மித் 29 மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் 22 ரன்கள் எடுத்தனர். ஹெட் 18 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
24.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. ஆசியாவில் அந்த அணியின் குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. அடுத்த வாரம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அந்த அணியின் பிரதான வீரர்கள் சிலர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒருநாள் போட்டியில் 214 ரன்களை டிஃபென்ட் செய்திருந்தது இலங்கை. 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையின் துனித் வெல்லலகே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்கா மற்றும் ஃபெர்னான்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அசலங்கா தொடர் நாயகன் விருதை வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT