Published : 14 Feb 2025 01:21 PM
Last Updated : 14 Feb 2025 01:21 PM
நடப்பு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி வரும் ஷர்துல் தாக்கூர், அஜித் அகார்க்கரின் கவனத்தைத் திருப்புமாறு தன்னைப்பற்றி அவருக்கு நினைவு படுத்தியுள்ளார்.
நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் 21.16 என்ற சராசரியில் 30 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 396 ரன்களையும் விளாசிய ஷர்துல் தாக்கூர் இதில் 3 அரைசதங்களையும் ஒரு முக்கியமான சதத்தையும் விளாசியுள்ளார்.
அடுத்ததாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்கு செல்கிறது இந்திய அணி. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாகும். இந்த இங்கிலாந்து தொடரில் தன்னைத் தேர்வு செய்தால், ஓய்வு பெற்ற அஸ்வின் தான் ஆடிய போது இந்திய அணிக்காக என்ன ரோலைச் செய்தாரோ அதே ரோல் தன்னால் செய்ய முடிவதே என்று ஷர்துல் தாக்கூர் இப்போது கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து தொடருக்கு சிராஜின் இடத்தை இவர் குறிவைக்கிறார் அல்லது ஹர்ஷித் ராணா இடத்தை குறிவைக்கிறார் என்று நமக்குப் புரிகிறது.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷர்துல் தாக்கூர் கூறியது: “தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் மனநிலையும் இப்போது என்னிடத்தில் உச்சத்தில் உள்ளது. நாட்டுக்காக விளையாடுவதைப் போன்ற உத்வேகம் அளிக்கும் விஷயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இந்திய அணியின் சேர்க்கையை இப்போது நாம் பார்த்தோமானால், அயல்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி நம்பர் 7 அல்லது 8-வது நிலையில் பேட் செய்யக்கூடிய பவுலருக்கான இடம் தேவையாக இருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த நிலையில்தான் பேட்டிங்கினாலும் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.
ஜடேஜாவும் அதே நிலையில் திறமையை நிரூபித்துள்ளார். அதே போல்தான் நானும் 7-8-ம் நிலையில் பயனுள்ள வகையில் பேட்டிங் ஆடுவேன்.
நான் அணியில் 3-வது அல்லது 4-வது வேகப்பந்து வீச்சாளராக செயலாற்றினாலும் முன்னிலை பவுலர்களுக்கு நான் ஒருபோதும் சளைத்தவனல்ல. எனவே ஜஸ்பிரித் பும்ரா ஒருமுனை என்றால் இன்னொரு முனையில் நான் வீசத் தயார். இது எனக்குப் புதிதல்ல. என் பவுலிங்கில் பல வெரைட்டிகள் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அதாவது சூழ்நிலைக்கேற்ப கண்டிஷன்களுக்கு ஏற்ப நான் பந்து வீச்சை மாற்றிக் கொள்வேன்.
டி20 போட்டிகளில் நானும் பும்ராவும் ஆடும் போட்டிகளைப் பார்த்தீர்கள் என்றால் நான் டெத் ஓவர்களில் அதிகம் வீசி இருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய, பழைய பந்துகள் இரண்டிலும் வீசுவேன். பேட்டிங்கிலும் பங்களிப்புச் செய்யக்கூடியவன். குறிப்பாக இங்கிலாந்தில் பின்னால் இறங்கி எடுக்கும் ரன்கள் அணிக்கு ஒரு நல் வாய்ப்பை வழங்கும். இது ஒரு தொடரில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.” இவ்வாறு ஷர்துல் தாக்கூர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT