Published : 14 Feb 2025 11:35 AM
Last Updated : 14 Feb 2025 11:35 AM
இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சிக்கு வராமல் கால்ஃப் ஆடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் இந்திய மைதானங்களையும் இந்திய அணியையும் இங்கிலாந்து மதிக்கவில்லை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
ரவி சாஸ்திரியும் கெவின் பீட்டர்சனும் வர்ணனையில் இங்கிலாந்து வீரர்கள் வலைப்பயிற்சியில் கலந்து கொள்ளாமல் கால்ஃப் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாகச் சாடினர். இங்கிலாந்து இங்கு வந்து வெள்ளைப்பந்து தொடரில் 8 போட்டிகளில் 7-1 என்று உதை வாங்கியுள்ளனர்.
காரணம் அவர்கள் இந்திய அணியையோ, இந்திய மண்ணையோ மதிப்பதில்லை என்று நாம் அன்றே கூறினோம், அதனால் தான் அவர்களுடன் இனி ஒரு டெஸ்ட், ஒரு டி20, ஒரு ஒருநாள் போட்டி என்று தொடரைக் குறைத்துக் கொண்டு அந்த இடைவெளியில் நெதர்லாந்து, அயர்லாந்து, ஆப்கன் அணிகளை அழைத்து ஆடினாலும் புண்ணியம் உண்டு என்று நாம் எழுதினோம்.
கெவின் பீட்டர்சனும் அத்தகைய மனநிலையில்தான் தொடர்ந்து இங்கிலாந்து அணியை, குறிப்பாக ஜாஸ் பட்லர் மற்றும் வீரர்களைக் கடுமையாகச் சாடி வருகிறார். அதாவது இந்த ஒட்டுமொத்த வெள்ளைப்பந்து தொடர் முழுதுமே இங்கிலாந்து வீரர்கள் ஒரேயொரு நெட் செஷனில் மட்டுமே பங்கேற்று பயிற்சி செய்துள்ளனர் என்று கடும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மெக்கல்லம் என்ன செய்கிறார் என்றெல்லாம் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இங்கிலாந்து ஊடகம் ஒன்றில், வலைப்பயிற்சி அமர்வைத் துறக்கக் காரணம் காயமடைந்து விடக்கூடாது என்பதுதான் என்று எழுதியது கெவின் பீட்டர்சன் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
“நீங்கள் இந்தியாவையும் இந்திய கண்டிஷனையும் அவமதிக்கிறீர்கள். ஒரு இங்கிலிஷ்காரன் என்ற அளவில் இங்கிலாந்து அணியின் தோல்விகளில் நான் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளேன்.
இப்போதுதான் ஒரு முன்னிலை பத்திரிகையாளர் எழுதிய காரணங்களைப் படிக்க நேர்ந்தது. அவர் கூறுகிறார் நானும் ரவி சாஸ்திரியும் தவறாகப் புரிந்து கொண்டோமாம். போட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாததும், அடுத்தடுத்துப் போட்டிகள் என்பதாலும் வலைப்பயிற்சி செய்து காயமடைந்து விடக்கூடாது என்பதுதான் கவலை என்றும் பயிற்சியைத் துறந்ததற்கு சாக்குப் போக்குச் சொல்கிறார்.
உங்களால் இந்தக் குப்பையைத்தான் காரணமாக எழுத முடியும் எனில் தயவு செய்து கிரிக்கெட் பற்றி எழுதாதீர்கள். எந்த ஒரு விளையாட்டு அட்டவணையிலும் காயங்கள் தவிர்க்கப் பட முடியாததே, இது ஆட்டத்தின் அங்கம். காயமடைவதால் நெட் பவுலர்களை எதிர்கொள்வது ஒன்றும் முடியாமல் போய் விடாது. ஸ்பின் பந்து வீச்சை எப்படி ஆடுவது என்ற கலையை பின்பு எப்படி கற்க முடியும்?
இந்த இடத்தில்தான் இங்கிலாந்து முன்னேற வேண்டும். நான் ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக என் கரியரைக் காப்பாற்றிக் கொண்டது பயிற்சியினால் மட்டுமே. பத்திரிகையாளார்கள் மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். ரசிகர்களை தயவுகூர்ந்து முட்டாளாக நினைக்காதீர்கள்” என்று கடுமையாகச் சாடினார் கெவின் பீட்டர்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT