Published : 14 Feb 2025 08:58 AM
Last Updated : 14 Feb 2025 08:58 AM

5 அணிகள் கலந்து கொள்ளும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

வடோதரா: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் வடோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் 20 ஆட்டங்கள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நுழையும். பிளே ஆஃப் ஆட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 15-ம் தேதி மும்பை பிராபர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ பெங்களூரு - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடர் உள்நாட்ட வீராங்கனைகளின் திறனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளது. முதல் இரு சீசன்களில் ஷ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் உள்ளிட்ட சில வீராங்கனைகள் அற்புதமாக செயல்பட்டதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கும் தேர்வாகினர்.

ஒவ்வொரு டபிள்யூபிஎல் சீசனிலும், வளர்ந்து வரும் இந்திய வீராங்கனைகளின் பட்டியல் வளர்ந்து வருகிறது. அலிசா ஹீலி, சோஃபி மோலினக்ஸ் மற்றும் கேத் கிராஸ் போன்ற வெளிநாட்டு நட்சத்திரங்கள் காயம் காரணமாக இந்த சீசனில் களமிறங்கவில்லை. இதனால் இம்முறை திறமை வாய்ந்த உள்நாட்டு வீராங்கனைகள் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீராங்கனைகன் பிரகாசிக்க பொன்னான வாய்ப்ப்பு கிடைத்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கும் ஷபாலி வர்மா, மோசமான பார்ம் காரணமாக சமீபத்தில் இந்திய அணியில் தனது இடத்தை இழந்திருந்தார். எனினும் அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்ம்மை மீட்டுள்ளார். வரும் ஜூலை மாதம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதை கருத்தில் கொண்டு ஷபாலி பாலி, டபிள்யூபிஎல் தொடரில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக களமிறங்கும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான காஷ்வீ கவுதம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில் கடந்த சீசனில் விளையாடிய முன்னணி வீராங்கனைகளான சோபி டிவைன், மோலினக்ஸ், கேத் கிராஸ் ஆகியோர் காயம் காரணமாக இம்முறை விளையாடவில்லை. அதேவேளையில் எலிஸ் பெர்ரி, ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபான ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.

2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட டெல்லி கேபிடல்ஸ் இம்முறை இறுதிப் போட்டி சோகங்களுக்கு முடிவு கட்ட முயற்சிக்கக்கூடும். அந்த அணியில் ஷபாலி வர்மா, மெக் லேனிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெ சுதர்லேண்ட், மரிஸான் காப் ஆகியோர் மட்டை வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். அதேவேளையில் பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, டிடாஸ் சாது, ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ் ஆகியோர் சவால் அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட் அமெலியா கெர் ஆகியோரை அதிகமாக நம்பியிருந்தது. இம்முறை அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளும் கைகொடுத்தால் சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிக்கலாம். குஜராத் ஜெயன்ட்ஸ் ஆஷ்லே கார்ட்னர் தலைமையிலும், யுபி வாரியர்ஸ் தீப்தி சர்மா தலைமையிலும் களமிறங்குகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x