Published : 14 Feb 2025 08:35 AM
Last Updated : 14 Feb 2025 08:35 AM
புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (15-ம் தேதி) துபாய் புறப்பட்டுச் செல்கிறது. இந்தத் தொடரில் பிசிசிஐ-யின் புதிய பயண கொள்கை முதல் முறையாக அமலாகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் பயணம் செல்ல மாட்டார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடர் சுமார் 3 வார காலத்தில் முடிவடைகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல பிசிசிஐ அனுமதிக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய கொள்கையின்படி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றுப்பயணத்தின் போது மட்டுமே வீரர்களின் குடும்பத்தினர் அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் வீரர்களுடன் இருக்க முடியும்.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது,“ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இப்போதைக்கு வீரர்கள் தங்கள் குடும்பத்தின்ருடன் செல்ல வாய்ப்பு இல்லை. மூத்த வீரர்களில் ஒருவர் இதைப் பற்றி விசாரித்தார், அவரிடம் புதிய கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால், குடும்பத்தினர் வீரர்களுடன் செல்ல மாட்டார்கள். ஆனால் விதிவிலக்குகள் வழங்கப்பட்டால், பிசிசிஐ எந்தவொரு செலவையும் ஈடுசெய்யாது. இதனால் அந்த நபரே முழு செலவையும் ஏற்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT