Published : 13 Feb 2025 07:47 PM
Last Updated : 13 Feb 2025 07:47 PM
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை வெல்லும் வாய்ப்பு ‘வெகு தொலைவிலும் இல்லை, அருகிலும் இல்லை’ என்ற நிலைதான் அந்த அணிக்கு. 2025 ஐபிஎல் சீசனில் அந்த நிலை மாறி கோப்பை வெல்லும் கனவு மெய்ப்படும் என ஆர்சிபி அன்பர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
இந்தச் சூழலில் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனை முன்னிட்டு ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்தது. 2024 சீசனில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்தது. மெகா ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கியது.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியை இதுவரை வழிநடத்தியவர்கள் அனைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள். ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சன், கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், டூப்ளசி என அந்தப் பட்டியல் உள்ளது. இந்த முன்னாள் கேப்டன்கள் எல்லோரும் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள். தங்கள் தேசத்தின் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் வழிநடத்தியவர்களும் உள்ளனர்.
இந்தச் சூழலில்தான் அந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக ரஜத் பட்டிதாரை அணியின் புதிய கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர்கள் விட்டுச்சென்ற பணியை பட்டிதார் செய்ய வேண்டி உள்ளது. மொத்தத்தில் இது பட்டிதாருக்கு மட்டுமல்லாது ஆர்சிபி அணிக்கும் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது.
வியூகம் சார்ந்து ஆர்சிபி அணிக்கு என ஒரு ரூட் இருந்தது. அதிலிருந்து இப்போது அந்த அணி நிர்வாகம் டைவர்ஷன் எடுத்துள்ளது. ஒருவகையில் இதை மற்ற ஐபிஎல் அணிகளின் ரூட் என்றும் சொல்லலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரிஷப் பந்த் , ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா என இந்திய வீரர்கள் மற்ற ஐபிஎல் அணிகளை வழிநடத்துகிறார்கள். அது போலவே இந்த சீசனில் ரஜத் பட்டிதார் ஆர்சிபி அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.
கேப்டன்சி ரோலுக்கு பொருந்துவாரா? - 31 வயதான வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே தொழில்முறை கிரிக்கெட் விளையாடி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணியின் கேப்டன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2021, 2022, 2024 சீசன்களில் விளையாடி உள்ளார். 2023 சீசனை காயம் காரணமாக மிஸ் செய்தார். ஆர்சிபி-க்காக 24 இன்னிங்ஸ் ஆடியுள்ள அவர் 799 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 112 ரன்கள் எடுத்துள்ளார். இது 2022 ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் பதிவு செய்த சதம் ஆகும். ஆர்சிபி அணியால் ரூ.20 லட்சத்துக்கு கடந்த 2021-ல் ஒப்பந்தமானவர் . 2022-ல் அணியில் மாற்று வீரராக வந்து மிரட்டல் ஆட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இப்போது கேப்டனாக உருவெடுத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணியை 16 போட்டிகளில் வழிநடத்தி 12 போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார். அந்த தொடரில் அவரது சக்சஸ் ரேட் 75 சதவீதம். கடந்த சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. பட்டிதார் தலைமையில் அந்த அணி ஆக்ரோஷமாக செயல்பட்டது. டி20 கிரிக்கெட்டில் 75%, முதல் தர கிரிக்கெட்டில் 50% மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 57% என அவரது கேப்டன்சியில் அணியின் வின்னிங் ரேட் உள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் கேப்டன்சி அனுபவம் மட்டும் இல்லாமல் களத்தில் ஆர்சிபி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் இன்புட்ஸ் அவருக்கு நிச்சயம் கிடைக்கும். அவரை அணியின் புதிய கேப்டனாக நியமித்ததை ஆர்சிபி பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர், முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, டூப்ளசி ஆகியோர் ஆதரித்துள்ளனர். பட்டிதாருக்கு தங்களது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.
பட்டிதாரின் எளிமை, கேப்டனாக சக வீரர்களை அரவணைத்து செல்வது, ஆர்சிபி அணியில் அவரது வளர்ச்சி உள்ளிட்டவற்றை அவர்கள் குறிப்பிட்டு சொல்லி உள்ளனர். ‘இந்த பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு நானும், அணியின் மற்ற வீரர்களும் உறுதுணையாக இருப்போம். களத்தில் உங்களது செயல்பாடு காரணமாக ஆர்சிபி ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள்’ என கோலி தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் கேப்டன் மட்டுமல்லாது அணியின் பயிற்சியாளர்கள், சீனியர் வீரர்கள், உரிமையாளர்கள் என பலரது முடிவுகள் ஆட்டத்தில் இருக்கும். அது ரஜத் பட்டிதாருக்கும் கிடைக்கும். அதே போல ஆர்சிபி அணியின் வீரர்கள், பயிற்சியாளர் குழு, உரிமையாளர்கள், ஆதரவாளர்கள், ரசிகர்கள் என அனைவரது நெடுநாள் கனவாக உள்ள கோப்பை வெல்லும் கனவை ரஜத் பட்டிதார் நிஜம் ஆக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT