Published : 13 Feb 2025 10:25 AM
Last Updated : 13 Feb 2025 10:25 AM
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.
ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா.
49 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் என்று சாதனை சேஸிங் செய்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச சாதனை சேஸிங் இதுவே. கேப்டன் ரிஸ்வான் 128 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இவருடன் ஜோடி சேர்ந்த சல்மான் அகா 103 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 134 ரன்களை விளாசினார். ஆனால் சல்மான் அகா ஆட்டமிழந்தார். ரிஸ்வான் நாட் அவுட். இருவரும் இணைந்து 260 ரன்களை 37 ஓவர்களில் சேர்த்தது சாதனைக் கூட்டணி ஆனது. இந்த 260 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்பதோடு உலக அளவில் 4-வது ஆகச்சிறந்த சேஸிங் கூட்டணி ரன்களாகும்.
முன்னதாக, ஃபகர் ஜமான், பாபர் அஸம் கூட்டணி 6 ஓவர்களில் 57 ரன்களைச் சேர்த்தனர். 10 ஓவர்களில் 91 ரன்கள் என்று அதிரடித் தொடக்கம் கண்டாலும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது பாகிஸ்தான். பிட்ச் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்புக்கு ஏதுவான பிட்ச். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 28 ஓவர்களில் 206 ரன்களை வாரி வழங்கினர். இதில் தெம்பா பவுமா 82 ரன்கள், உலக சாதனை நாயகன் பிரெட்ஸ்கீ 83, கிளாசன் 56 பந்துகளில் 87 ரன்கள், கடைசியில் விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 32 பந்துகளில் 44 ரன்களை விளாசினர். கடைசி 10 ஓவர்களில் 110 ரன்களுக்கும் மேல் குவித்தனர் தென் ஆப்பிரிக்காவினர்.
தென் ஆப்பிரிக்கா பவுலிங்கின் போதும் லுங்கி இங்கிடி, வியான் முல்டர், கார்பின் பாஷ் ஆகியோர் 27 ஓவர்களில் 223 ரன்களை வாரி வழங்கினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா தன் முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. நன்றாக விளையாடியும், நல்ல டோட்டல் கொண்டு வந்தும் தோற்றிருக்கிறது என்றால் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில்தான் பிரச்சினை. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சல்மான் அகா வென்றார். முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் நாளை விளையாட உள்ளது பாகிஸ்தான்.
ஆஸி.யை வீழ்த்திய இலங்கை: பாகிஸ்தான் போன்ற அணிகள் பெரிய இலக்கை விடாமுயற்சியுடன் விரட்டுகின்றன. நேற்று இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 214 ரன்களை வைத்து கொண்டு ஆஸ்திரேலியாவை 165 ரன்களுக்குச் சுருட்டி வெற்றி பெற்றுள்ளனர். மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து: இவையெல்லாம் ஆங்காங்கே நடைபெற்று வரும்போது எந்த ஒரு ஃபைட்டும் இல்லாமல், போராட்டக் குணமும் இல்லாமல் இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு நேற்று அகமதாபாத் மட்டைப் பிட்சில் மடிந்து தொடரில் ஒயிட் வாஷ் தோல்வி அடைந்துள்ளது. இந்த லட்சணத்தில் 3-0 உதை பிரச்சினையில்லை, நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம் என்கிறார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட். ‘அது எப்படி முடியும்?’ டிராபியை பட்லர் எடுத்துக் கொண்டு ஓடினால்தான் உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT