Published : 13 Feb 2025 07:53 AM
Last Updated : 13 Feb 2025 07:53 AM

ஷுப்மன் கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்: ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக வென்றது இந்தியா

ஷுப்மன் கில்

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக தொடரை வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்னுக்கு பதிலாக டாம் பேன்டன் இடம் பெற்றார்.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னில் மார்க் வுட் பந்தில் விக்கெட் கீப்பர் பில் சால்ட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். தனது 73-வது அரை சதத்தை கடந்த விராட் கோலி 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷீத் பந்தை தற்காப்பு ஆட்டம் விளையாட முயன்ற போது பில் சால்ட்டிடம் கேட்ச் ஆனது.

2-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஷுப்மன் கில் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 95 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை அடித்தார். அபாரமாக விளையாடிய அவர், 102 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷீத் பந்தை கிராஸாக ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது போல்டானார்.

3-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 104 ரன்கள் குவித்தது. தனது 20-வது அரை சதத்தை கடந்த ஸ்ரேயஸ் ஐயர் 64 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷீத் லெக் திசையில் வீசிய பந்தை தட்டிவிட முயன்ற போது பில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் கே.எல்.ராகுல் 40, ஹர்திக் பாண்டியா 17, அக்சர் படேல் 13, ஹர்ஷித் ராணா 13, வாஷிங்டன் சுந்தர் 14, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களில் நடையை கட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 356 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷீத் 4, மார்க் வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 41 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் கடைசி 9 ஓவர்களில் இங்கிலாந்து வெகுவாக ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியால் இந்த 9 ஓவர்களில் 67 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

357 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் டக்கெட் 34, பில் சால்ட் 23, டாம் பேன்டன் 38, ஜோ ரூட் 24, ஹாரி புரூக் 19, ஜாஸ் பட்லர் 6, லியாம் லிவிங்ஸ்டன் 9, ஆதில் ரஷீத் 0, மார்க் வுட் 9, கஸ் அட்கின்சன் 38 ரன்களில் நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால் மேற்கொண்டு 88 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்களையும் தாரை வார்த்தது.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. நாக்பூர், கட்டாக்கில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக ஷுப்மன் கில் தேர்வானார். அவர், இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரை சதம் உட்பட 259 ரன்கள் குவித்திருந்தார்.

உடல் உறுப்புதானம் பிரச்சாரம்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் பிசிசிஐ-யின் 'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள், உயிர்களை காப்போம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பச்சை நிற பட்டை அணிந்து விளையாடினார்கள். போட்டியின் முடிவில் சுமார் 22 ஆயிரம் பேர் உடல் உறுப்புதான விழிப்புணர்வு எடுத்துள்ளதாக மைதான ஸ்கிரீனில் காண்பிக்கப்பட்டது.

‘விரைவாக 2,500’: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்களை விரைவாக எட்டிய பேட்ஸ்மன் என்ற சாதனையை படைத்தார். அவர், இந்த மைல் கல் சாதனையை 50-வது போட்டியில் எட்டியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லாவை 51 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை தற்போது ஷுப்மன் கில் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

‘50-ல் 100’: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் சதம் விளாசினார். இது அவருக்கு 50-வது ஆட்டம் ஆகும். இதன் மூலம் 50-வது ஆட்டத்தில் சதம் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் ஷுப்மன் கில்.

‘அகமதாத்தில் கில்லியான கில்’: அகமதாபாத் மைதானத்தில் டெஸ்ட், டி 20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி என அனைத்து வடிவிலும் சதம் விளாசியுள்ளார் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒரே மைதானத்தில் அனைத்து வடிவிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மன் கில். உலக அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்தும் 5-வது வீரர் கில் ஆவார். தென் ஆப்பிரிக்காவின் டூ பிளெஸ்ஸிஸ் (ஜோகன்னஸ்பர்க்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (அடிலெய்டு ஓவல்), பாகிஸ்தானின் பாபர் அஸம் (கராச்சி), தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் (செஞ்சுரியன்) ஆகியோரும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x