Published : 12 Feb 2025 07:47 PM
Last Updated : 12 Feb 2025 07:47 PM

பும்ரா இல்லாத சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதிப்பை ‘பேலன்ஸ்’ செய்யுமா இந்திய அணி? - ஓர் அலசல்

ஐஸ்பிரீத் பும்ரா

வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஐஸ்பிரீத் பும்ரா பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இது, இந்த தொடரில் இந்திய அணியை இம்சிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து என எட்டு அணிகள் விளையாடுகின்றன. மார்ச் 9-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் விளையாடும் அணிகள் தங்கள் அணி வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு பிப்.11-ம் தேதியுடன் முடிவடைந்த சூழலில் இந்திய அணி வீரர்களின் இறுதி பட்டியலில் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை.

“முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட மாட்டார். அவருக்கு மாற்றாக அணியில் ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளார். அதேபோல கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இல்லை” என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி (இறுதி பட்டியல்) - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.

பும்ராவுக்கு என்ன ஆனது? - கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை. அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து களத்துக்கு திரும்ப ஐந்து வார காலம் வரை ஓய்வு தேவை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் பும்ரா விளையாடுவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில்தான் காயம் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பும்ரா இல்லாமல் எப்படி? - இந்திய அணியின் பவுலிங் அஸ்திரங்களில் முதன்மையானவர் பும்ரா. அதை மறுக்க முடியாது. ‘பும்ரா’ என்ற பெயரை கேட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் சற்று பதறி போவார்கள். அந்த அளவுக்கு அவர்களை களத்தில் தனது ஆட்டத்திறன் மூலம் இம்சிப்பார். ‘மேன் பார்ன் வித் ஏ கோல்டன் ஆர்ம்’ என அவர் சொல்லலாம். தனித்துவமான பவுலிங் ஸ்டைல் கொண்டவர். இன்னிங்ஸின் முதல் பவர்பிளே ஓவர்களில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருக்கும்.

புதிய பந்தில் (New Ball) எதிரணி பேட்ஸ்மேன்களை அவர் அச்சுறுத்துவார். அதேபோல விக்கெட் தேவைப்படும் நேரங்களில் அணியின் கேப்டன் பும்ராவை பந்து வீச சொல்வது வழக்கம். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கும். டெத் ஓவர்களில் (பவுலிங் இன்னிங்ஸின் கடைசி ஓவர்கள்) அவரது அனுபவம் பேசும். இது அனைத்தையும் இந்தியா மிஸ் செய்யும்.

பாதிப்பு என்ன? - தொடக்க ஓவர்களில் முகமது ஷமியுடன் பந்துவீசும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும். அணியின் பவுலிங் யூனிட் தலைவனாக இருக்கும் பும்ரா இல்லாத காரணத்தால் மற்ற பவுலர்களுக்கு அவரது ஆலோசனை கிடைக்காது. அதோடு பும்ரா இல்லாத காரணத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டியுள்ளது. இக்கட்டான இறுதி ஓவர்களில் எதிரணியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமென்ற அழுத்தம் பவுலர்களுக்கு இருக்கும்.

இவை அனைத்தும் மேலாக அணியின் பிளெயிங் லெவனில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஆடுவது என குழப்பமும் எழக்கூடும். அது ஆடுகள சூழலை பொறுத்தே அமையும்.

துபாய் ஆடுகளம் எப்படி? - இந்த தொடரில் இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் மூன்று மற்றும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் அரை இறுதி மற்றும் இறுதி ஆகிய ஆட்டங்களையும் துபாயில் விளையாடுகிறது. துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும். அந்த வகையில் இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சாம்பியன் டிராபி தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பும்ரா எனும் எக்ஸ்-ஃபேக்டர் இல்லாத சூழலில் அவர்களது பங்களிப்பு அணியில் முக்கியமாகிறது.

அண்மையில் துபாயில் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பகல் நேர ஆட்டங்களில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அதே போல இடது கை பந்து வீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x