Published : 12 Feb 2025 07:57 AM
Last Updated : 12 Feb 2025 07:57 AM
அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலும், கட்டாக்கில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
இதே மைதானத்தில்தான் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி ஆட்டம் என்பதால் இன்றைய ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்வதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும்.
கட்டாக் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் விளாசியது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தி உள்ளது. மற்றொரு சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலியும் பார்முக்கு திரும்புவதில் தீவிரம் காட்டக்கூடும். தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அழுத்தம் இல்லாமல் செயல்படக்கூடும். இதை விராட் கோலி சரியாக பயன்படுத்திக் கொண்டு உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். ரன் இயந்திரமாக கடந்த காலங்களில் திகழ்ந்த விராட் கோலி 89 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநள் போட்டி அரங்கில் 14 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை கடந்து சாதனையை நிகழ்த்துவார்.
இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக ரிஷப் பந்த் களமிறக்கப்படக்கூடும். மற்றபடி அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோர் பலம் சேர்த்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அதேவேளையில் பந்து வீச்சில் 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ரவீந்திர ஜடேஜாவும் பின்வரிசையில் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவராக திகழ்கிறார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும்.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி 20 தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டி தொடரையும் பறிகொடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதற்கு அந்த அணி போராடக்கூடும். கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பில் சால்ட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் கைகொடுத்தால் இந்திய அணிக்கு சவால் அளிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT