Published : 12 Feb 2025 07:45 AM
Last Updated : 12 Feb 2025 07:45 AM
ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி.
ராஜ்கோட்டில் நடைபெற்று வந்த கால் இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் குஜராத் அணி 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 140, ஜெய்மீட் பட்டேல் 103 ரன்கள் விளாசினர். 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணி நேற்றை 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 54, ஜெயதேவ் உனத்கட் 29, ஷெல்டன் ஜாக்சன் 27, ஷிராக் ஜானி 26 ரன்கள் சேர்த்தனர். நட்சத்திர பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா 2 ரன்களில் வெளிறினார். குஜராத் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான பிரியஜித்சிங் ஜடேஜா 4, அர்ஸான் நக்வஸ்வாலா 3 விக்கெட்களையும், சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 98ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தமிழகம் தோல்வி: நாக்பூரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் விதர்பா - தமிழ்நாடு அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் விதர்பா 353 ரன்களும், தமிழ்நாடு 225 ரன்களும் எடுத்தன. 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பார் 272 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோடு 112, ஹர்ஷ் துபே 64 ரன்கள் விளாசினர். இதையடுத்து 401 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 61.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக சோனு யாதவ் 57, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 53 ரன்கள் சேர்த்தனர். முகமது அலி 10, நாராயண் ஜெகதீசன் 18, சாய் சுதர்சன் 2, விஜய் சங்கர் 5, பூபதி குமார் 0, ஆந்த்ரே சித்தார்த் 15, முகமது 12 ரன்களில் வெளியேறினர். விதர்பா அணி சார்பில் ஹர்ஷ் துபே, நச்சிகேத் பூதே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மும்பை அணி அபாரம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மும்பை - ஹரியானா அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை 315 ரன்களும், ஹரியானா 301 ரன்களும் எடுத்தன. 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 339 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே 108, சூர்யகுமார் யாதவ் 70, ஷிவம் துபே 48 ரன்கள் விளாசினர்.
354 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹரியானா நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 57.3 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லக்சய் தலால் 64, சுமித் குமார் 62 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ராய்ஸ்டன் தியாஸ் 5, ஷர்துல் தாக்குர் 3, தனுஷ் கோட்டியன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT