Published : 11 Feb 2025 12:37 PM
Last Updated : 11 Feb 2025 12:37 PM

“எங்களது 1996 இலங்கை அணி இன்றைய இந்திய அணியை இந்தியாவிலேயே வீழ்த்தும்” - ரணதுங்கா கருத்து

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா

1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி இப்போதைய இந்திய அணியை இந்திய மண்ணிலேயே காலி செய்து விடும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு திறமை போதாது என்றும் தனியார் டி20 கிரிக்கெட் லீகுகள் திறமைகளை அழித்து வருகிறது என்றும் கூறும்போது இப்போதைய இந்திய அணியை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

‘தி டெலிகிராப்’ ஊடக நிறுவனத்துக்கு அர்ஜுனா ரணதுங்கா கூறியதாவது: 90-களின் ஆரம்பத்தில் நான் கேப்டனாக இருந்த போது பேட்டிங் ஆர்டரை ஒரு பேட்டராகப் பார்ப்போம். கவாஸ்கர், வெங்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத்.. என அவர்களை வீழ்த்தி விட முடியாது. அசாருதின், சச்சின் டெண்டுல்கர், காம்ப்ளி, திராவிட் அடுத்ததாக வந்தனர். இவர்கள் எல்லாம் எவ்வளவு தரமான வீரர்கள் என்பது உலகறியும்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... இந்திய அணியில் அந்த ‘தரம்’, ‘கிளாஸ்’ இப்போதைய அணியில் இருக்கிறதா? இல்லை என்றுதான் கூறுவேன்.

இதை நான் உங்கள் முகத்திலடித்தாற் போல்தான் கேட்கிறேன், அந்தத் தரம் இப்போதைய இந்திய அணியில் இருக்கிறதா? இல்லை, இல்லவே இல்லை.

இப்போது ஆடும் இந்திய அணியை எனது 1996-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய மண்ணிலேயே மண்ணைக் கவ்வச் செய்யும். இப்போது ஆடும் வீரர்களை இருமுறை வீழ்த்தி விடுவோம். இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவேன்.

நாம் நம் இளம் தலைமுறை வீரர்களுக்கு முறையான கிரிக்கெட் ஆட்டத்தைப் பயிற்றுவிக்கிறோமா? இந்திய அணியால் இன்னொரு கவாஸ்கர், அமர்நாத், வெங்சர்க்கார், சச்சின், திராவிட்களை உருவாக்க முடியுமா? எனக்கு இது உண்மையில் சந்தேகமாகவே உள்ளது.

இலங்கையிலும் இதே பிரச்சினைதான், வீரர்கள் இப்போது நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். தனியார் கிரிக்கெட்டில் ஆடுகிறார்கள், நாட்டுக்காக ஆட வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நாட்டுக்காக ஆடும் மதிப்பு என்பது போயே போய்விடும். அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் கிரிக்கெட்டை மட்டுமேதான் ஆடுவார்கள். இவ்வாறு கூறினார் அர்ஜுனா ரணதுங்கா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x