Published : 10 Feb 2025 09:59 PM
Last Updated : 10 Feb 2025 09:59 PM
எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வெல்ல விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
“இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். எப்போதும் சொல்வது போல வீரர்களின் தரம் என்பது நிரந்தரமானது, ஃபார்ம் என்பது தற்காலிகமானது. நிச்சயம் அவர்கள் ஃபார்முக்கு திரும்புவார்கள்.
சமீபத்திய போட்டியில் ரோஹித் சதம் விளாசி உள்ளார். கோலியும் ஃபார்முக்கு வந்து விடுவார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பட்டம் வெல்ல அவர்கள் இருவரும் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். இந்த தொடர் நடைபெற உள்ள பாகிஸ்தான் மற்றும் துபாயில் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். அதனால் இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பிரதானமானதாக இருக்கும்.
தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என துணை கண்ட அணிகள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இந்திய அணியை பார்த்தால் சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என சிறந்த பவுலிங் அட்டாக்கினை கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் அது போல தான் உள்ளது” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்தியா இதுவரை இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT