Published : 09 Feb 2025 11:13 PM
Last Updated : 09 Feb 2025 11:13 PM
கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கேப்டன் ரோஹித் சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கிலுள்ள பாராபட்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக விராட் கோலியும், குல்தீப் யாதவுக்குப் பதிலாக வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றிருந்தனர். வருண் சக்கரவர்த்திக்கு இது முதல் போட்டியாகும். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பிலிப் சால்ட் 26 ரன்களில், வருண் சக்கரவர்த்தி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட், டக்கெட்டுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் அரை சதம் விளாசினர். டக்கெட் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, ஜடேஜா பந்தில், ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். ரூட் 72 பந்துகளில் 69 ரன்கள் விளாசி, ஜடேஜா பந்தில், விராட் கோலியிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். பின்னர் வந்த வீரர்களில் ஹாரி புரூக் 31, கேப்டன் ஜாஸ்பட்லர் 34, லியாம் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் குவித்தனர். ஜேமி ஓவர்டன் 6, கஸ் அட்கின்ஸன் 3, ஆதில் ரஷீத் 14 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட, கில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். கில் 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில், ஜேமி ஓவர்டன் பந்தில் போல்டானார். தொடர்ந்து விளையாட வந்த விராட் கோலி 8 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஆதில் ரஷித் பந்தில் வீழ்ந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் தனது 32-வது சதத்தை விளாசினார். 90 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன்119 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வீழ்ந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 44, கே.எல்.ராகுல் 10, ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 41, ரவீந்திர ஜடேஜா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேமி ஓவர்டன் 2, லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத், கஸ் அட்கின்ஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
2-வது அதிவேக சதம்: ரோஹித் இந்த ஆட்டத்தின்போது, ஒருநாள் போட்டிகளில் தனது 2-வது அதிவேக சதத்தை விளாசினார். நேற்றைய ஆட்டத்தில் 76 பந்துகளில் அவர் 100 ரன்களை எட்டினார். இந்த வரிசையில் அவர் 63 பந்துகளில் சதம் (டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2023 -ல்) எடுத்தது முதலிடத்தில் உள்ளது.
5-வது முறை: ஒருநாள் போட்டிகளில் ஜோ ரூட்டை 5-வது முறையாக வீழ்த்தியுள்ளார் ஜடேஜா. இதுவரை 11 இன்னிங்ஸ்களில் 147 பந்துகளை ஜோ ரூட்டுக்கு வீசியுள்ள ஜடேஜா, 126 ரன்களைக் கொடுத்து 5 முறை அவரை அவுட்டாக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT