Published : 09 Feb 2025 03:57 PM
Last Updated : 09 Feb 2025 03:57 PM
டி20 கிரிக்கெட்டில் அதாவது சர்வதேச டி20 ஆயினும் தனியார் டி20 லீகுகளாயினும் ஒரே ஒரு கிங் பவுலர் என்றால் அது ரஷீத் கான் என்று தைரியமாகக் கூறிவிடலாம், அவர் அருகில் இருப்பவர் மே.இ.தீவுகளின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ மட்டுமே.
மற்றபடி ஸ்பின்னர்கள் யாரும் ரஷீத் கானுக்கு அருகில் இல்லை. இந்நிலையில் 4 ஆண்டுகள் ஆடினால், உடற்தகுதியுடன் இருந்தால் டி20 கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய அபூர்வ சிகாமணியாகி விடுவேன் என்று உண்மையான அடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார் ரஷீத் கான்.
டிவைன் பிராவோ டி20 சாதனையை முறியடித்து இன்று டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையை வைத்திருப்பவர் ரஷீத் கான், ஆயிரம் விக்கெட்டுகள் என்ற அரிய மைல்கல்லை எட்ட இன்னும் 367 விக்கெட்டுகள் தேவை. டி-20யில் ரஷீத் கான் 2015ல் அறிமுகமான போது இலங்கையின் லஷித் மலிங்காதான் இந்த வடிவத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி முன்னணியில் இருந்தார். டிவைன் பிராவோ பிறகு மலிங்காவைப் பின்னுக்குத் தள்ளினார்.
2016ல் ரஷீத் கான் தன் கிரிக்கெட் வாழ்வின் 2ம் ஆண்டில் இருந்த போது 38 விக்கெட்டுகள்தான் எடுத்திருந்தார் ஆனால் பிராவோ 367 டி20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 2024 முடிவில் ரஷீத் கான் 622 விக்கெட்டுகளை எடுத்து விட்டிருந்தார். பிராவோவிற்கு வயதாகி விட்டது ஓய்வு பெற்று விட்டார், ஆனால் ரஷீத் கானுக்கோ இப்போது தான் வயது 26 ஆகிறது.
ரஷீத் கான் தன் முதல் 14 டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தது தனியார் கிரிக்கெட் தோன்றுவதற்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் அவர் டாப் 500 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கூட இல்லை. பிராவோவை விட 328 விக்கெட்டுகள் பின்னால் இருந்தார்.
ரஷீத்தின் இந்த விஸ்வரூப எழுச்சிக்குக் காரணம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என்று சீரான முறையில் எடுத்ததே. யாரும் 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தச் சாதனையைச் செய்ததில்லை. அதுவும் எந்த ஒரு பவுலரும் தொடர்ச்சியாக 3 ஆண்டுக்கு மேல் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
2018ம் ஆண்டு 61 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகள் என்று 100 என்ற மைல் கல்லை நூலிழையில் தவற விட்டார். 2017ல் 80 விக்கெட்டுகளையும் 2022ல் 81 விக்கெட்டுகளையும் 2016ல் 87 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் சாத்து முறை நடக்கும் ஓவர்கள் 17-20 டெத் ஓவர்கள்தான், இதில் ஒரு ஸ்பின்னரான ரஷீத் கானின் சாதனைகள் ஆச்சரியகரமானவை. இந்த ஓவர்களில் ஓவருக்கு 7.92 ரன்களைத்தான் அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.
198 இன்னிங்ஸ்களில் முதல் 6 ஓவர்களுக்குள் வீசும் போது 56 விக்கெட்டுகளை 6.94 என்ற சிக்கன விகிதத்திலும் மிடில் ஓவர்கள் என்று கருதப்படும் 7-16 ஓவர்களில் 436 விக்கெட்டுகளை ஓவருக்கு 6.18 என்ற சிக்கன விகிதத்திலும் 17-20 ஓவர்களில் 124 விக்கெட்டுகளை 7.92 என்ற சிக்கன விகிதத்திலும் எடுத்துள்ளார். இந்தப் புள்ளி விவரமே போதும் டி20 கிரிக்கெட்டில் ஆல்டைம் கிரேட் ரஷீத் என்பதை நிரூபிக்க.
ஐபிஎல் முதல் உலகம் முழுதும் அனைத்து தனியார் லீகுகளிலும் நம்பர் 1 பவுலராகத் திகழ்ந்து வருகிறார். தனியார் லீக் கிரிக்கெட்டில் 310 போட்டிகளில் 410 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரஷீத் கான். இதில் பிராவோ 490 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் 460 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே 400 போட்டிகளுக்கும் மேல் ஆடி இந்த விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ரஷீத் கான் 400 போட்டிகளை எட்டும்போது எங்கு இருப்பார் என்று நம்மால் ஊகிக்க முடியவில்லை.
மிக மிக மிக ஆச்சரியகரமான பெரிய பவுலர் ரஷீத் கான் என்பதற்கு அவரது இத்தகைய அபரிதமான புள்ளி விவரங்களே சாட்சி. மேலும் எந்த ஒரு பெரிய பேட்டரும் கூட இவரது லெக் ஸ்பின் புதிரை இன்னும் அவிழ்க்க முடியவில்லை என்பதும் நிரூபிக்கப் பட்ட ஒன்றாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT