Published : 09 Feb 2025 12:35 PM
Last Updated : 09 Feb 2025 12:35 PM

நியூஸிலாந்து பேட்டிங்கில் இருந்து பாடம் கற்குமா இங்கிலாந்து?

பாஸ்பால் மாயையில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் ஒன்றையே, கொக்கிற்கு ஒன்றே மதி என்று மனதில் கொண்டு மற்ற தொடர்களை ஏனோதானோவென்று ஆடி தொடர் தோல்விகளைச் சந்திப்பதை ஒரு பெருந்தன்மையாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் சொதப்பியது, அதன் பிறகு மே.இ.தீவுகளில் இரண்டு தொடர்களை இழந்தது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்தது. இப்போது இங்கிலாந்தின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் மெக்கல்லம் எடுத்துக் கொண்ட பிறகும் அணுகுமுறையில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை.

இதற்கு மாற்றாக பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்புத் தொடர் முதல் போட்டியில் நேற்று நியூஸிலாந்து ஆடிய விதம் இன்னிங்ஸை கட்டமைத்த விதம் உண்மையில் மெக்கல்லம் பிறந்த மண்ணின் அணுகுமுறையில் இருந்து மெக்கல்லமே ஒரு பக்கத்தை உருவிக்கொள்வாரா என்ற கேள்வியையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இங்கிலாந்தின் பிரச்சினை என்னவெனில் அனைவருமே தங்களை ஒரு விவ் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், சேவாக், ஜெயசூரியா என்று நினைத்துக் கொண்டு ஆடுவதுதான்.

அன்று 72/0 என்ற நிலையிலிருந்து மடிந்ததை எப்படி விளக்குவது? எல்லோரும் அவுட் ஆன ஷாட் ஏன் இப்படி ஆட வேண்டும் என்ற கேள்வியையே எழுப்பியது. ஜோ ரூட் ஆட்டமிழந்த பிறகு பட்லர், பெத்தெல் நின்றனர். 14 ஓவர்களில் 59 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் அதன் பிறகு ஆடிய ஷாட் மோசமானது அக்சர் படேல் வீசிய பந்து கொஞ்சம் பவுன்ஸ் குறைவுதான். ஆனால் அரைக்குழி பந்தை டாப் எட்ஜ் செய்ததைத்தான் அணுகுமுறை கோளாறு என்கிறோம்.

அதே போல் பெத்தெல், ஜடேஜாவின் நேர் நேர் தேமா பந்தை ஸ்லாக் செய்ய முயன்று எல்.பி.ஆனார். லியாம் லிவிங்ஸ்டன் ஹர்ஷித் ராணா பந்துக்கு நடந்து வர வேண்டிய அவசியமேயில்லை. வந்து என்ன செய்தார்? எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். இவர்கள் நின்று ஆடி கடைசி 10-15 ஓவர்களில் அடித்திருந்தால் 330 பிட்சில் இப்படி 248 ரன்களுக்கு மடிய வேண்டிய அவசியமில்லையே.

மாறாக நேற்று நியூஸிலாந்து 39/2 என்ற நிலையிலிருந்து வில்லியம்சன் (58), டேரில் மிட்செல் (81) அருமையாக நின்று ஆடி 19 ஓவர்களில் 95 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகு டேரில் மிட்செலும் கிளென் பிலிப்சும் சேர்ந்து 10 ஓவர்களில் 65 ரன்கள் சேர்த்த போது மிட்செல் ஆட்டமிழந்தார். 37.5 ஓவர்களில் 200/5 என்று இருந்தது நியூஸிலாந்து. அதன் பிறகு மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு முனையில் ஆக்ரோஷமாக ஆடி 31 ரன்களை எடுக்க, மறு முனையில் கிளென் பிலிப்ஸும் தன் பங்குக்கு தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார்.

பாகிஸ்தானின் சிறந்த பவுலர்களுக்கெல்லாம் அடி. 45.4 ஓவர்களில் 254/6 என்று இருந்த நியூஸிலாந்து அதன் பிறகு கிளென் பிலிப்ஸின் அதிரடியில் கடைசி 26 பந்துகளில் 76 ரன்களை விளாசியது, ஷாஹின் அப்ரீடியின் கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டது, அவரது அனாலிசிஸ் 5 ஓவர் 23 ரன்களில் இருந்து 10 ஓவர் 88 ரன்களானது. கிளென் பிலிப்ஸ் முதலில் 43 பந்துகளில் 29 ரன்களை எடுத்திருந்தவர் கடைசியில் 31 பந்துகளில் 78 ரன்களை ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷாவுக்கு எதிராகவே எடுக்க முடிந்தது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆனதைக் கண் கூடாகப் பார்த்தோம்.

இந்த ஆட்டம், இந்த நிதானம், இந்தத் திட்டமிடலை, இன்னிங்ஸ் கட்டமைத்தல் என்னும் கலையை இங்கிலாந்து கற்காத வரை பாஸ்பால் கீஸ்பால் என்று உளறிக்கொண்டு தோல்வி கண்டு பிரச்சினையில்லை என்று பிதற்றிக் கொண்டு கடைசியில் ஆஷசிலும் படுதோல்வி கண்டு இங்கிலாந்து மீடியா முன்னாள் வீரர்களின் சாபங்களை வாங்கிக் கொண்டுதான் மெக்கல்லம் வெளியேறும் பரிதாப நிலை ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x