Published : 09 Feb 2025 02:42 AM
Last Updated : 09 Feb 2025 02:42 AM
கட்டாக்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் உள்ள பாராபட்டி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் கட்டாக்கில் உள்ள பாராபட்டி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நட்சத்திர பேட்மேனான விராட் கோலி வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாமல் இருந்தார். நேற்றைய பயிற்சியில் கலந்து கொண்ட விராட் கோலி இயல்பாக இருந்தார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். விராட் கோலியின் வருகையால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்படக்கூடும். இதனால் தொடக்க வீரராக ஷுப்மன் கில் களமிறங்கக்கூடும். முதல் போட்டியில் 87 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். பின் வரிசையில் அக்சர் படேல் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார். நாக்பூரில் அரை சதம் விளாசிய அவரிடம் இருந்து சிறந்த பங்களிப்பு வெளிப்படக்கூடும். இது ஒருபுறம் இருக்க கேப்டன் ரோஹித் சர்மா பார்மின்றி தவிப்பது தொடர் கதையாகி உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறிய அவர், நாக்பூர் போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 64 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் அவர், அனைத்து வடிவிலான கிரிக்கெட்லும் ஒரு ஆட்டத்தில் கூட அரை சதம் எடுக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில் ரோஹித் சர்மா, இழந்த பார்மை மீட்டெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். எஞ்சிய 2 ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா மட்டை வீச்சில் சிறப்பாக செயல்பட தவறும் பட்சத்தில் அவரது எதிர்காலம் குறித்து கேள்விகள் எழக்கூடும்.
இது ஒருபுறம் மற்றொரு சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலியும் சிறந்த முறையில் ஆட்டத்தை தொடங்குவதில் தீவிரம் காட்டக்கூடும். ஏனெனில் அவரும் ஆஸ்திரேலிய தொடரில் ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளுக்கு இரையானார். தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி ரன் இயந்திரமாக செயல்பட்டுள்ளதால் அவர், மீண்டும் தனது பேட்டிங்கை புதுப்பித்துக்கொள்ளக்கூடும் என எதிபார்க்கப்படுகிறது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் முதல் போட்டியில் ஹர்ஷித் ராணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் முகமது ஷமி பார்முக்கு திரும்பி உள்ளதும் பலம் சேர்த்துள்ளது. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். ஏனெனில் போட்டி நடைபெறும் பாராபட்டி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும்.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும். பில் சால்ட், ஜாஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் தங்களது பேட்டிங்கை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால் அவற்றை பெரிய அளவிலான இன்னிங்ஸாக மாற்றத் தவறினர். பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினால் சவால் கொடுக்க முயற்சிக்கலாம். மேலும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை இந்திய சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும்.
சாதனையை நோக்கி கோலி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் மைல் கல் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 94 ரன்கள் தேவையாக உள்ளது. இந்த ரன்களை அவர், இன்றைய ஆட்டத்தில் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடிப்பார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (18,426) முதலிடத்திலும், இலங்கையின் குமார் சங்கக்கரா (14,234) 2-வது இடத்திலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT