Published : 08 Feb 2025 07:49 AM
Last Updated : 08 Feb 2025 07:49 AM
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் உள்ளது. கடைசியாக அந்த அணி டிசம்பர் 11-ல் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்துக்கு பின்னர் சென்னையின் எஃப்சி அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. 3 ஆட்டங்களை டிரா செய்தது. 19 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.
ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 18 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி (28) அணியை விட 10 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. சென்னையின் எஃப்சி அணிக்கு இந்த ஆட்டம் தவிர்த்து மேற்கொண்டு 4 ஆட்டங்களே உள்ளன. அதேவேளையில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சிக்கு 5 ஆட்டங்கள் உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டக்கூடும். நடப்பு சசீசனில் கடந்த டிசம்பர் 7-ல் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியிருந்தது.
இதேபோன்ற செயல் திறனை வெளிப்படுத்தி மீண்டும் மூன்று புள்ளிகளை பெற ஈஸ்ட் பெங்கால் அணி முயற்சி மேற்கொள்ளக்கூடும். அதேவேளையில் சென்னையின் எஃப்சி அணி பதிலடி கொடுப்பதில் முனைப்பு காட்டக்கூடும். சென்னையின் எஃப்சி அணி கொல்கத்தாவை மையமாகக் கொண்ட அணிகளுக்கு எதிராக இந்த சீசனில் கடைசியாக விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றியை ருசிக்கவில்லை. இதில் 2 டிராவையும், 3 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT