Published : 07 Feb 2025 07:40 AM
Last Updated : 07 Feb 2025 07:40 AM

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் அபாரம்

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டக்கெட் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 6-வது ஓவரில் பில் சால்ட் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசி மிரட்டினார். தொடர்ந்து அக்சர் படேல் வீசிய 8-வது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது.

ஹர்திக் பாண்டியா வீசிய 8-வது ஓவரில் 3-வது ரன் சேர்க்க முயன்ற போது ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் கூட்டணியால் ரன் அவுட் ஆனார் பில் சால்ட். அவர், 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு பில் சால்ட், பென் டக்கெட் ஜோடி 8.5 ஓவர்களில் 75 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் பென் டக்கெட் (32), புல் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு உயரமாக செல்ல மிட்விக்கெட் திசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓடிச் சென்று அற்புதமாக கேட்ச் செய்தார்.

இதே ஓவரில் ஹாரி புரூக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் லெக் திசையில் கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் ஜாஸ் பட்லர், ஜோ ரூட் ஜோடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றது. ஆனால் ஜோ ரூட்டை 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. இதையடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். தனது 27-வது அரை சதத்தை கடந்த ஜாஸ் பட்லர் 67 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பாண்டியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பட்லர், பெத்தேல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 5 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிரைடன் கார்ஸ் 10 ரன்களில் முகமது ஷமி பந்தில் போல்டானார். 40 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. தனது 2-வது அரை சதத்தை அடித்த ஜேக்கப் பெத்தேல் 64 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர், ஹர்திக் பாண்டியா வீசிய 44-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஆதில் ரஷீத் 8 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். கடைசி வீரராக சாகிப் மக்மூத் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது ஷமி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

249 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் சாகிப் மக்மூத் பந்திலும் ஆட்டமிழந்தனர். 19 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஷுப்மன் கில்லுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் ஸ்ரேயஸ் ஐயர்.

மட்டையை சுழற்றிய ஸ்ரேயஸ் ஐயர் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் தனது 19-வது அரை சதத்தை அடித்தார். அவரது அதிரடியால் இந்திய அணி 14 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அபாரமாக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில், 59 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் பெத்தேல் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஜோடி 94 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய அக்சர் படேல் உறுதுணையுடன் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார் ஷுப்மன் கில்.

தனது 3-வது அரை சதத்தை கடந்த அக்சர் படேல் 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷீத் பந்தில் போல்டானார். அப்போது வெற்றிக்கு 28 ரன்களே தேவையாக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், அக்சர் படேல் ஜோடி 108 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 2 ரன்னில் ஆதில் ரஷீத் பந்தில் வெளியேறினார். நிதானமாக பேட் செய்து வந்த ஷுப்மன் கில் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் மக்மூத் பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனது.

இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 9 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் சேர்க்க இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது.

கோலி இல்லை: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி விளையாடவில்லை. அவருக்கு வலது மூட்டு பகுதியில் வீக்கம் இருந்ததால் களமிறக்கப்பட வில்லை என டாஸின் போது கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில் விராட் கோலியின் காயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2 அறிமுகங்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடினார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x