Published : 07 Feb 2025 07:15 AM
Last Updated : 07 Feb 2025 07:15 AM
காலே: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இருவருக்கும் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 35 வயதான ஸ்டாயினிஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே மற்றொரு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக விலகி இருந்த நிலையில் தற்போது ஸ்டாயினிஸின் ஓய்வு ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
2015-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்டாயினிஸ் 71 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,495 ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரு சதம், 6 அரை சதங்கள் அடங்கும். 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.
பாட் கம்மின்ஸ் இல்லாததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் வழிநடத்தக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் லாகூரில் நடைபெறுகிறது. தொடர்ந்து 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 28-ம் தேதி ஆப்கானிஸ்தானுடனும் ஆஸ்திரேலிய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT