Published : 06 Feb 2025 12:51 PM
Last Updated : 06 Feb 2025 12:51 PM
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் தேவையே இல்லை என்றும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தியும் அணியில் தற்போது சேர்க்கப்பட்டு விட்டார். அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஏற்கெனவே இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கும் போது ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்த்திருப்பது தேவையற்றது என்கிறார் பத்ரிநாத்.
இந்திய அணித்தேர்வு பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் படுமோசமாக ஆடியும் அவருக்குப் பரிசாக துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. முழு உடல் தகுதி இல்லாத பும்ராவும் ஷமியும் அணியில் இடம்பெற்றுள்ளனர். சிராஜ் இல்லை என்று கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. அணித்தேர்வில் அரசியல் புகுந்து விளையாடுகிறது.
தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் போன்றோருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய் வருகிறது. அணித்தேர்வு குறித்து யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை. கேட்டால் தர்க்கபூர்வமான எந்த ஒரு பதிலும் வருவதில்லை என்ற விமர்சனங்களும் வருகின்றன. உத்தேச அணியில் சஞ்சு சாம்சன் ஒருநாள் இல்லை என்றதுமே அவரது டி20 கேமில் சொரத்து இல்லாமல் போனதைப் பார்த்தோம். இஷான் கிஷனையும் ஓட ஓட விரட்டுகின்றனர். ஒரு மாதிரியான ஒரு இறுக்கமான சூழ்நிலையும், ‘லாபி’களும் கொண்ட செலக்ஷன் சூழல் நிலவுவதையே இது காட்டுகிறது.
இந்நிலையில் பத்ரிநாத் கூறுகையில், “அணியில் சில வீரர்களின் தேர்வு கொஞ்சம் ட்ரிக்கிதான். சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருப்பது குறித்து நான் உள்ளபடியே ஆச்சரியமடைந்தேன். அவருக்கு அணியில் வேலையே இல்லை. லெவனில் அவர் இடம்பெற முடியாது, மிக மிகக் கடினம். பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லாத வீரரை அணியில் எடுத்து என்ன பயன்?
ரோஹித் சர்மாவுக்கு குல்தீப் யாதவை பிடிக்கும், அவரை நிரம்பவும் ஆதரிக்கிறார். மற்ற ஸ்பின்னர்கள் செய்ய முடியாததை குல்தீப் யாதவ் செய்வார் அதுதான் கேப்டன்சிக்கு வந்தது முதல் ரோஹித் அவரை சப்போர்ட் செய்யக் காரணமாக உள்ளது. குல்தீப் யாதவ் தைரியமானவர். மிடில் ஓவர்களில் நம்பி அவரிடம் பந்தைக் கொடுக்கலாம். அயல்நாட்டு வீரர்கள் பலர் அவரை சரியாகக் கணிக்க முடியாமல் திணறியதை நாம் நிறைய முறைப் பார்த்திருக்கிறோம்.” என்றார் பத்ரிநாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT