Published : 06 Feb 2025 11:37 AM
Last Updated : 06 Feb 2025 11:37 AM

‘‘முகமது ஷமி இன்னும் ‘ரெடி’ ஆகவில்லை’’ - ஆகாஷ் சோப்ரா பகீர்

முகமது ஷமி | கோப்புப்படம்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங் என்று 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 5 ஸ்பின்னர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும், முகமது ஷமி இன்னும் தயாராகவில்லை என்றும் குண்டு ஒன்றை ஆகாஷ் சோப்ரா தூக்கிப் போட்டுள்ளார்.

34 வயதாகும் ஷமி சமீபத்தில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டி20 சர்வதேசப் போட்டியிலும் ஆடினார். ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது முதுகு காயம் காரணமாக பாதியில் விலகிய ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றிய நிலையையும் பிசிசிஐ இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. அவருக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று அகர்கர் கூறியுள்ள நிலையில் அவரை எப்படி சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்தனர் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “பும்ராவின் உடல் தகுதி குறித்து நம்பிக்கைக்குரிய செய்தி எதுவும் என் காதுகளுக்கு எட்டவில்லை. இருப்பினும் நான் ஊகங்களை நம்புவதில்லை, நான் கேள்விப்பட்டதையும் கூற விரும்பவில்லை. முழு உடல் தகுதி கொண்ட 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 100 சதவீதம் அணியில் இடம்பெற வேண்டும்.

முகமது ஷமியைப் பொறுத்தவரை கடந்த போட்டிகளில் டீசண்டாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் தன் முழு உடல் தகுதியுடனும், தன் முழு பந்து வீச்சுத் திறனுடன் இன்னும் தயாராகவில்லை என்றே நான் கருதுகிறேன். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் நிச்சயம் தேவை. சிராஜ் சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு வந்து விடுவார் என்றுதான் நான் நம்புகிறேன்” இவ்வாறு தன் யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வரும் 19-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி, பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெற 20-ம் தேதி இந்தியா-வங்கதேச அணிகள் துபாயில் மோதுகின்றன. 23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x