Published : 06 Feb 2025 06:42 AM
Last Updated : 06 Feb 2025 06:42 AM

நாக்பூரில் இன்று முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை

நாக்பூர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுசாதனை படைத்தது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்தார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 6) நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டி20 தொடரில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித் திருந்த சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, துருவ்ஜூரல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை.

அதேநேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்று அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது. இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும்போது அது அணியின் வெற்றிக்கு வித்திடும். அதேபோல் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா ஆகியோரிடமிருந்து சிறப்பான அதிரடியை அணி நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது.

மேலும், நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு வலுவான தூண்களாக உள்ளனர். பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடியைத் தரக் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் டி20 தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணியின் தூண்கள் ஜோரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர், பென் டக்கெட், பிலிப் சால்ட் ஆகியோர் உள்ளனர்.

இவர்களிடமிருந்து உயர்மட்ட செயல்திறனை எதிர்பார்க்கலாம். மேலும், நடுவரிசையில் அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டன் அணிக்கு பலம் சேர்க்கிறார். பந்துவீச்சில் அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், கார்ஸ், ஓவர்டன், ரஷித் ஆகியோர் வலுவாக உள்ளனர். இவர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக் காத்திருக்கின்றனர்.

அணிகள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல், ,ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

இங்கிலாந்து: ஜாஸ் பட்லர் (கேப்டன்), பிலிப் சால்ட் (துணை கேப்டன்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்
டன், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.

நேரம்: பிற்பகல் 1.30
இடம்: நாக்பூர்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x