Published : 05 Feb 2025 01:16 PM
Last Updated : 05 Feb 2025 01:16 PM
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 1984-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2002 தொடரில் அங்கு சிக்கியது போன்ற ஒரு படுமோசமான கிறைஸ்ட்சர்ச் பிட்சில் சிக்கிப் படுதோல்வி கண்டது.
இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஓரளவுக்கு நன்றாகவே ஆடியது, முதல் டெஸ்ட் ஹை ஸ்கோரிங் மேட்ச். அது டிரா ஆக முடிய, 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கிய அந்த டெஸ்ட் போட்டியின் மொத்த ஆட்ட நேரம் 11 மணி 42 நிமிடங்களில் முடிந்தது.
படுமோசமான பிட்சில் நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூஸிலாந்து கேப்டன் ஜெஃப் ஹோவர்த். அணியில் ரிச்சர்ட் ஹாட்லி, மார்டின் குரோவ், ஜான் ரைட், புரூஸ் எட்கர், லான்ஸ் கெய்ன்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்தனர்.
இங்கிலாந்து அணிக்கு பாப் வில்லிஸ் கேப்டன், இயன் போத்தம், கிரேம் ஃபவ்லர், டேவிட் கோவர், டெரிக் ரேண்டல், ஆலன் லாம்ப், மைக் கேட்டிங் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்தனர்.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் என்று தடுமாறியது. ஜெஃப் குரோவ், ஜெர்மி கோனி இணைந்து ஸ்கோரை 137 வரை கொண்டு சென்றனர், அப்போது ஜெஃப் குரோவ் வெளியேறினார். உடனே அப்போதைய 4 தலை சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவரான ரிச்சர்ட் ஹாட்லி இறங்கி புரட்டி எடுக்கத் தொடங்கினார்.
81 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 99 ரன்களை ரிச்சர்ட் ஹாட்லி விளாச நியூஸிலாந்து 307 ரன்கள் எடுத்தது. இந்தப் பிட்சில் இது பெரிய ஸ்கோர். இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தை 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் என்று முடித்தது. ஆனால் மறுநாள் காலை ரிச்சர்ட் ஹாட்லி, இவான் சாட் ஃபீல்ட், லான்ஸ் கெய்ன்ஸ் பந்து வீச்சில் இந்தப் பிட்சில் நிற்க முடியாமல் இங்கிலாந்து 50 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் ஃபாலோ ஆன் கொடுத்து விடுவார்கள், இப்போதைய கேப்டன்கள் போல் பயந்து போய் 2-வது இன்னிங்ஸை தொடர மாட்டார்கள். இங்கிலாந்து ஃபாலோ ஆன் ஆடியது. ரிச்சர்ட் ஹாட்லியின் புரூட்டல் ஸ்பெல்லில்7 விக்கெட்டுக்கு 53 ரன்கள் என்று இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது. மறுநாள் அதாவது இதே பிப்ரவரி 5-ம் நாள் அன்று 93 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டு படுமோசமான இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்களில் தோல்வி அடைந்தது.
ரிச்சர்ட் ஹாட்லி 18 ஓவர்கள் வீசி, 6 மெய்டன்கள் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்தார். ஆல்ரவுண்ட் திறமைக்காக ரிச்சர்ட் ஹாட்லி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இங்கிலாந்து இந்தத் தொடரில் இந்த ஒரு படுதோல்வியுடன் முடித்து ஓரளவுக்கு மரியாதையைக் காத்துக் கொண்டது. இது போன்ற ஒரு பிட்சை இப்போது நினைத்தாலும் இங்கிலாந்து அஞ்சும். ஆனால் இந்தியாவில் அதன் பிறகு இங்கிலாந்துக்குப் போடப்பட்ட குழிப்பிட்ச்கள் இதை விடவும் மோசமானவை என்பதை நாம் நினைவில் நிறுத்துவது நலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT