Published : 04 Feb 2025 07:55 AM
Last Updated : 04 Feb 2025 07:55 AM
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கைப்பற்றி கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்து மிரட்டியது. அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். டி20 வடிவில் இந்திய அணியின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 248 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது: இதுபோன்ற டி20 கிரிக்கெட்டைதான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். ஆட்டத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அதிக ரிஸ்க், அதிக வெகுமதி கொண்ட கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்.
டி20 அணியில் உள்ள வீரர்கள் அந்த சித்தாந்தத்தை நன்றாக ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் தொடர்ந்து 250 முதல் 260 ரன்களை எடுக்க முயற்சிக்க விரும்புகிறோம். அதைச் செய்ய முயற்சிக்கும்போது, நாங்கள் 120 முதல் 130 ரன்களுக்கு ஆட்டமிழக்கக்கூடிய ஆட்டங்களும் இருக்கும். அதுதான் டி20 கிரிக்கெட் வடிவம்.
அதிக ரிஸ்க்குடன் விளையாடாதவரை, பெரிய வெகுமதிகளை பெற முடியாது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். பெரிய அளவிலான தொடர்களிலும் நாங்கள் இந்த வழியிலேயே விளையாட விரும்புகிறோம். ஆட்டத்தில் தோல்வி அடைந்துவிடுவோம் என பயப்பட விரும்பவில்லை. இந்திய டி20 அணியின் சித்தாந்தம் சுயநலம் இல்லாத மற்றும் அச்சமின்மையை அடிப்படையாகக் கொண்டது, கடந்த ஆறு மாதங்களில், இந்த அணியில் உள்ள வீரர்கள் இதை எல்லா நாட்களிலும் செய்துள்ளனர்.
அபிஷேக் சர்மா போன்ற வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்க விரும்புகிறோம். இந்த வீரர்களிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மணிக்கு 140-150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இதைவிட சிறந்த டி20 சதத்தை நான் பார்த்ததில்லை. வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்ட விதம் அற்புதமானது. இங்கிலாந்து உயர்தர அணி என்பதால் இந்த தொடர் அநேகமாக வருண் சக்கரவர்த்திக் பெஞ்ச்மார்க் ஆக இருக்கலாம். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT