Published : 03 Feb 2025 09:05 PM
Last Updated : 03 Feb 2025 09:05 PM

“சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித், கோலியின் பங்களிப்பு முக்கியமானது” - கவுதம் கம்பீர்

மும்பை: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“ரோஹித் மற்றும் விராட் கோலி என இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரர்கள். அவர்கள் அணியில் இருப்பது இந்தியாவுக்கு வலு சேர்க்கிறது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் இருவரது பங்களிப்பு முக்கியமானது. .

நான் ஏற்கெனவே சொன்னது போல தேசத்துக்காக விளையாட வேண்டுமென்ற வேட்கை அவர்களிடம் உள்ளது. அதை சிறப்பாக செய்யவே இருவரும் விரும்புகின்றனர். உலகக் கோப்பை தொடருடன் ஒப்பிடும் போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் முற்றிலும் வித்தியாசமானது. இதில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. அதனால் இந்த தொடரை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியம். இந்த தொடரை வெல்ல 5 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது அவசியம்.

23-ம் தேதி அன்று நடைபெறும் அந்த ஒரு போட்டியை (பாகிஸ்தான் அணியுடனான லீக் போட்டி) மட்டுமே வெல்ல வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி துபாய் பயணிக்கவில்லை. அனைத்து ஆட்டங்களிலும் வென்று, சாம்பியன் பட்டத்தை வெல்லவே அங்கு பயணிக்கிறோம்” என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது.

தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

மார்ச் 4-ம் தேதி துபாயில் முதல் அரையிறுதி போட்டியும், மார்ச் 5-ம் தேதி லாகூரில் இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெறுகிறது. மார்ச் 9-ம் தேதி லாகூரில் இறுதிப்போட்டி. இந்தியா இறுதிக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டி துபாயில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x