Published : 31 Jan 2025 11:18 PM
Last Updated : 31 Jan 2025 11:18 PM

த்ரில் வெற்றி: 17-வது முறையாக தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை | IND vs ENG 4-வது டி20

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்தியா.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த சூழலில் 4-வது டி20 போட்டி புனேவில் வெள்ளிக்கிழமை (ஜன.31) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. முதல் இன்னிங்ஸின் 2-வது ஓவரை சாகிப் மஹ்மூத் வீசினார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் (1 ரன்), திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவை அவுட் செய்தார். இதில் திலக் வர்மாவும்,சூர்யகுமார் யாதவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் வந்த ரிங்கு சிங், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங், 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் ரன் குவிப்பில் ஆர்வம் காட்டினர். 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் துபே. அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி இருந்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி 182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஃபில் சாட் - பென் டக்கெட் இணை ஓப்பனிங்க் இறங்கியது. இதில் ஃபில் சாட் 23 ரன்களும், பென் 29 ரன்களும் எடுத்திருந்தனர். கேப்டன் ஜாஸ் பட்லர் வெறும் 2 ரன்களுடன் நடையை கட்டி அதிர்ச்சி கொடுத்தார். ஹார் ப்ரூக் அரை சதம் (51 ரன்கள்) விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தொடர்ந்து இறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 9, ஜேக்கப் பெதல் 6, ஜேமி ஓவர்டன் 19, ஆதில் ரஷித் 10 என சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 19.4 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆன நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ந்து 17-வது டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x