Published : 31 Jan 2025 05:33 AM
Last Updated : 31 Jan 2025 05:33 AM
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 232, ஸ்டீவ் ஸ்மித் 141, ஜோஷ் இங்லிஷ் 102 ரன்கள் விளாசினர்.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 81.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 57, மார்னஷ் லபுஷேன் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 147, ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 154 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
உஸ்மான் கவாஜா 352 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 232 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 251 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டகளுடன் 141 ரன்களும், அறிமுக வீரரான ஜோஷ் இங்லிஷ் 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு கண்டி டெஸ்ட் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட், டேமியன் மார்ட்டின் ஜோடி 200 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் 3 விக்கெட்களை விரைவாக இழந்தது. ஒஷாடோ பெர்னாண்டோ 7, திமுத் கருணரத்னே 7, ஏஞ்சலோ மேத்யூஸ் 7 ரன்களில் நடையை கட்டினர். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. தினேஷ் சந்திமால் 9, கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்மேனன், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 610 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இலங்கை அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT