Published : 29 Jan 2025 08:49 AM
Last Updated : 29 Jan 2025 08:49 AM

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிப்.17-ல் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்துடன் இணைந்து 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் தமிழ்நாடு டிரையாத்லான் சங்கத்துடன் இணைந்து எஸ்டிஏடி ஆசிய டிரையாத்லான் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளது.

23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் வரும் பிப்ரவரி 17 முதல் 20 வரை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பாராலிம்பிக்கில் 3 பதக்கம் வென்றுள்ள உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், ஈட்டி எறிதலில் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சுமித் அன்டில், நவ்தீப் சிங் உள்ளிட்ட பிரபல வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

எஸ்டிஏடி ஆசிய டிரையாத்லான் கோப்பை போட்டி பிப்ரவரி 16-ம் தேதி அடையாறில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நடைபெற உள்ளது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 45 வீரர், வீராங்னைகள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக ஜப்பானில் இருந்து 12 பேர், இந்தியாவில் இருந்து 10 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 4 பேருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டி 750 மீட்டர் நீச்சல், 20 கிலோமீட்டர் சைக்ளிங் மற்றும் 5 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நடத்தப்படும்.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய பாராலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் ஜெயவந்த் குண்டு, தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் செயலாளர் கிருபாகர ராஜா, தமிழ்நாடு டிரையாத்லான் சங்கத்தின் தலைவர் ராமசந்திரன், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய டிரையாத்லான் கோப்பை போட்டிகளுக்கான சின்னம் மற்றும் இலச்சினையை வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x