Published : 28 Jan 2025 04:04 PM
Last Updated : 28 Jan 2025 04:04 PM
“நான் காம்ப்ளியை விட்டுப் பிரிந்துவிடவே நினைத்தேன். ஆனால் அவரை அந்த நிலையில் விட்டுச் சென்றால் ஆதரவின்றி நிற்பார் எனத் தோன்றியது. என் வாழ்க்கையில் பல தருணங்களில் நானே எனக்குச் சொல்வது ‘நீ தான் இக்குடும்பத்தில் அன்னையும், தந்தையுமாக நிற்க வேண்டும்’ என்பதையே” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹூவிட் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் மைதானத்தில் கலக்கிய வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின், காம்ப்ளி விளையாட்டுத் திறமையால் புகழின் உச்சிக்குச் சென்றனர். ஆனால், காம்ப்ளி தனது மதுப்பழக்கத்தால் இப்போது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு முதியவர் போன்ற தோற்றத்தோடு நோயுடன் போராடி வருகிறார்.
அவருடை முதல் திருமணம் முறிந்த நிலையில் 2006-ம் ஆண்டு ஆண்ட்ரியா ஹூவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனிஷ்க் விளம்பரம் மூலம் பிரபலமான மாடல் ஆண்ட்ரியாவை காம்ப்ளி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையேயும் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகின. இடையில் காம்ப்ளி 14 முறை மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி மறுவாழ்வு சிகிச்சைக்கும் சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில், இப்போது நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழாவுக்கு காம்ப்ளியை மனைவி ஆண்ட்ரியா அழைத்துச் சென்றிருந்தார். அதில் சுனில் கவாஸ்கரிடம் விருது வாங்க காம்ப்ளியை ஆண்ட்ரியா அழைத்துச் சென்ற காட்சிகள் வைரலானது. வான்கடே நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வாரத்தில் காம்ப்ளியின் 53-வது பிறந்தநாளை மருத்துவமனையில் அவருடன் ஆண்ட்ரியா கொண்டாடினார். அந்தக் காட்சிகளும் கவனம் பெற்றனர்.
இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா மனம் திறந்து காம்ப்ளியுடனான வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர், “நான் காம்ப்ளியைவிட்டு பிரிந்துவிடவே நினைத்தேன். ஆனால் அவரை அந்த நிலையில் விட்டுச் சென்றால் ஆதரவின்றி நிற்பார் எனத் தோன்றியது. இப்போது அவர் ஒரு குழந்தையைப்போல் இயலாமை நிலையில் உள்ளார். அது என்னை வருந்தச் செய்கிறது. அது எனக்குக் கவலையும் அளிக்கிறது. இந்த நிலையில் என் நண்பர்கள் இருந்தாலே நான் விட்டுச் செல்ல மாட்டேன். காம்ப்ளி எனக்கு அதற்கும் மேல் அல்லவா!
நிறைய நேரங்களில் நான் அவரை விட்டுச் சென்றுவிட்டு பின்னர் கவலை கொண்டு திரும்பி வருவேன். அவர் சாப்பிட்டாரோ? படுக்கையில் சரியாக படுத்திருக்கிறாரா? என்றெல்லாம் கவலை கொள்வேன். உடனே வந்து திரும்பிப் பார்ப்பேன். அவருக்கு என்னுடைய தேவை இருந்திருக்கும். காம்ப்ளியின் உடல்நிலையோடு என் பிள்ளைகளையும் சேர்த்தே வளர்ப்பது எனக்கு மிகவும் கடினமான விஷயமாகவே இருக்கிறது. ஆனால் என் மகன் கிறிஸ்டியானோ அதனை புரிந்து கொண்டார். எனக்கு உதவியாக இருக்கிறார். கிறிஸ்டியானோ 4 வயதாக இருந்தபோதே வீட்டின் நிலவரத்தைப் புரிந்து கொண்டார்.
பல நேரங்களில் நான் எனக்கே சொல்லிக் கொள்வேன். நான் தான் குடும்பத்தின் தாய், தந்தை என்று. என் முகத்தில் இருக்கும் உணர்வுகளைப் பார்த்தே என் மகன் என்னைப் புரிந்து கொள்வார். எனது மனநலம் குறித்தும் எப்போதும் என் மகன் வருந்துவார். ஒருமுறை காம்ப்ளியை விவாகரத்து செய்யக் கூட விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் அவருடைய நிலைமையால் அதனை வாபஸ் பெற்றுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
காம்ப்ளி - ஆண்ட்ரியா தம்பதிக்கு ஜீசஸ் கிறிஸ்டியானோ காம்ப்ளி என்ற மகனும், ஜோஹன்னா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆண்ட்ரியா போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் காம்ப்ளி தன்னை குடிபோதையில் தாக்கியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், ஆண்ட்ரியாவின் மனம் திறந்த இந்தப் பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆண்ட்ரியாவின் அன்பு உன்னதமானது என்றும், ஆண்ட்ரியா எப்போதோ இத்தகைய மோசமான உறவில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். இது அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் இன்னும் மன உளைச்சலை நீட்டிக்கவே செய்யும் என்று இன்னொரு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.
வினோத் காம்ப்ளிக்கு நேர்ந்தது என்ன? - சச்சின் டெண்டுல்கரின் பள்ளித் தோழரும், அவரது கிரிக்கெட் இணையுமான முன்னாள் இந்திய இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி, நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்றும், வினோத் காம்ப்ளியின் நிலை குறித்த தங்கள் வேதனைகளைப் பகிர்ந்தும் பதிவுகளில் கருத்திட்டனர். அந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியவில்லை. நடப்பது அசாத்தியமான நிலையில், மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது வேதனை அலைகளைத் தோற்றுவித்தது.
கிரிக்கெட் உலகில், நைட்டீஸ்களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவை அடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. 1996 உலகக் கோப்பை போட்டியில், இந்தியா படுதோல்வி அடைந்தபோது, வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியையும் எளிதில் மறந்துவிட முடியாது. அதன் பிறகு, வினோத் காம்ப்ளியின் இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலகப் புகழ்பெற வேண்டிய வீரரை அழித்துவிட்டது.
இந்தப் பின்னணியில்தான் உடலளவிலும், மனதளவிலும் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் வினோத் காம்ப்ளியின் வாழ்க்கை நொடிந்துபோனது வெளிச்சத்துக்கு வந்தது. அவரை முழுமையாக மீட்கும் வகையில், 1983 உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் குழு முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சி ஒன்றுக்கு வினோத் காம்ப்ளி வந்திருந்தார். அங்கு நொடிந்த நிலையில், ஓரமாக உட்கார்ந்து இருந்து காம்ப்ளி, தனது பால்யகால கிரிக்கெட் தோழரான சச்சின் டெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது. காம்ப்ளி அருகே சென்று தோளில் கை போட்டு அரவணைத்த சச்சினை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹாலிக் பாதிப்பு போன்றவை, அவரை யாருமே அணுகாத தனிமை வாழ்வுக்கு இட்டுச் சென்றது. அவரது மீளும் முயற்சி தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT