Published : 27 Jan 2025 04:08 PM
Last Updated : 27 Jan 2025 04:08 PM

‘அபாய’ பிட்ச்சில் ஷமி பெற்றுத் தந்த அட்டகாச வெற்றி | நினைவிருக்கா?

ஐசிசி-யினால் மிக மோசமான பிட்ச் என்று தரப்படுத்தப்பட்ட ஜொஹான்னஸ்பர்க் பிட்சில் 2018-ம் ஆண்டின் இன்றைய தினத்தில் (ஜன.27) தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அதாவது, கடுமையான ஸ்விங் மற்றும் பயங்கர பவுன்ஸ் என்று இந்த டெஸ்ட் பிட்ச் டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்றதன்று என்று ஐசிசி-யே தெரிவித்து தரப்படுத்திய பிட்ச் இது. இதில் 5 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி எடுத்து தென் ஆப்பிரிக்காவை 63 ரன்களில் வீழ்த்த உதவினார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமை இந்திய அணி தோற்றது. 3-வது டெஸ்ட்டான இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தைரியமாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் விராட் கோலி. புஜாராவும் கோலியும் போராடி அரைசதம் எடுக்க, புவனேஷ்வர் குமார் பயனுள்ள 30 ரன்களை எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்களை மட்டுமே எடுத்தது. மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாந்தர், பெலுக்வயோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கேகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, பும்ராவின் பந்து வீச்சைத் தாங்க முடியாமல் அவரிடம் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 194 ரன்களுக்கு மடிந்தது. அதிகபட்சமாக ஹஷீம் ஆம்லா 61 ரன்கள் எடுத்தார். பிலாண்டர் 35 ரன்களை எடுத்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி மீண்டும் ஓர் அட்டகாசமான போராட்ட 41 ரன்களை எடுக்க, அஜிங்கிய ரஹானே 48 ரன்களை எடுக்க, மீண்டும் புவனேஷ்வர் குமார் 33 ரன்களை எடுக்க, முகமது ஷமி அதிரடி முறையில் 27 ரன்களை விளாச, இந்திய அணி 247 ரன்களை எடுத்தது. பிலாண்டர், ரபாடா, மோர்கெல் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

241 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அய்டன் மார்க்ரம் விக்கெட்டை 4 ரன்களில் ஷமியிடம் இழந்தது. ஆனால் டீன் எல்கர், ஹஷிம் ஆம்லா கூட்டணி அபாரமாக ஆடி ஸ்கோரை 124 ரன்கள் வரைக் கொண்டு சென்றனர். அப்போது ஹஷிம் ஆம்லா 52 ரன்களில் பிளிக் ஷாட்டில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து இஷாந்த் ஷர்மாவிடம் ஆட்டமிழக்க, அதுவே திருப்பு முனை விக்கெட் ஆனது.

அபாய வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு பும்ரா வீசிய பந்து ஒன்று எகிறி எட்ஜ் ஆக, கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் டுபிளெசிஸ் தாழ்வாக வந்த இஷாந்த் பந்தில் பவுல்டு ஆனார். குவிண்டன் டி காக்கிற்கும் பந்து ஷார்ட் ஆக தாழ்வாக வர எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார்.

வெர்னன் பிலாண்டர் புல் ஷாட் ஆடப்போய் ஷமி பந்தில் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். பெலுக்வயோ, கேகிசோ ரபாடா, மோர்னி மோர்கெல் மூவரும் டக் அவுட் ஆக கடைசி விக்கெட்டாக லுங்கி இங்கிடியை ஷமி வீழ்த்த, ஒரு முனையில் டீன் எல்கர் பார்ட்னர் இல்லாமல் 82 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, தென் ஆப்பிரிக்கா 177 ரன்களுக்குச் சுருண்டது. கடைசி 9 விக்கெட்டுகள் 53 ரன்களுக்கு விழுந்தது. தென் ஆப்பிரிக்கா தொடரை 2-1 என்று வென்றது.

ஆனால், டீன் எல்கர் ஆடிய இன்னிங்ஸ் அட்டகாசமான டெஸ்ட் இன்னிங்ஸ். இன்றைக்கு உலகில் எந்த ஒரு வீரரும் ஆட முடியாத பிட்சில் டீன் எல்கர் எடுத்த 82 ரன்கள் டபுள் செஞ்சுரிக்குச் சமம், அதுவும் அவரை கடைசி வரை வீழ்த்தவே முடியவில்லை. ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமாரும், தொடர் நாயகனாக பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டார். பிட்ச்சின் தரநிலை படுமோசம் என்று ஐசிசி ரேட்டிங் கொடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x