Published : 27 Jan 2025 03:09 PM
Last Updated : 27 Jan 2025 03:09 PM
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று டிரா செய்ததோடு 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட்டை வென்றது மே.இ.தீவுகள்.
முல்டானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களுக்குச் சுருண்டு போக பாகிஸ்தான் அணி வெறும் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 244 ரன்கள் எடுக்க வெற்றி இலக்கான 254 ரன்களை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் 133 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்து போனது.
இந்திய அணி பாணியில் குழிப்பிட்ச்தான் ஒரே கதி என்று நம்பிய பாகிஸ்தான் குழிப்பிட்ச்களைப் போட்டு இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது, இப்போது தனக்குத் தானே குழி தோண்டிக்கொள்ளுமாறு வெஸ்ட் இண்டீஸிடம் டெஸ்ட்டைக் கோட்டை விட்டு தொடரை சமன் செய்ய அனுமதித்தது. வெஸ்ட் இண்டீஸின் இடது கை ஸ்பின்னர் வாரிக்கன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இன்று காலை 76/4 என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதே ஸ்கோரிலேயே சவுத் ஷகீல், காஷிஃப் அலி ஆகியோரை இழந்தது. முகமது ரிஸ்வான் மட்டுமே 25 ரன்களை எடுத்து கொஞ்சம் தடுத்துப் பார்த்தார். ஆனால் எதிர்முனையில் சல்மான் ஆகா-15, சஜித் கான் - 7, நோமன் அலி -6, அப்ரார் அகமது 0 என்று வரிசையாக ஆட்டமிழக்க 133 ரன்களுக்கு 44 ஓவர்களில் சுருண்டது. மே.இ.தீவுகளின் இடது கை ஸ்பின்னர் வாரிக்கன் இந்த போட்டியில் 70 ரன்களை மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் மண்ணில் 1990-க்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் வெற்றியை ருசித்தது. ஜோமல் வாரிக்கன் இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் முதல் இன்னிங்ஸில் கடைசியாக இறங்கி 36 ரன்கள் என்ற உபயோகமுள்ள ரன்களை எடுத்தார், 2வது இன்னிங்சிலும் 18 ரன்கள் எடுத்தார் வாரிக்கன்.
இவரது பந்து வீச்சின் சிறப்பு அம்சம், இவரது வேரியேஷன் மற்றும் ஒரே லெந்த்தில் சொல்லி சொல்லி வீசுவது. இதுதான் பாகிஸ்தானின் சரிவுக்குக் காரணமாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஆடி நீண்ட காலமான வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானின் ரண சிகிச்சையை அவர்களுக்கே செய்து காட்டி விட்டது. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்தது இந்தப் பிட்சில் பிரமாதமான சாதனைதான். பாகிஸ்தானைப் பொறுத்தவரை நல்ல உண்மையான பிட்ச்களைப் போட்டு ஆடுவதை விடுத்து இப்படிப்பட்ட குழிப்பிட்ச்களைப் போட்டு ஆடுவதால் ஒரு கட்டத்தில் இந்திய அணி போல் ஸ்பின்னையும் ஆடத்தெரியாத, வேகப்பந்து வீச்சையும் ஆடத்தெரியாத வீரர்களைக் கொண்ட அணியாக மாறிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT