Last Updated : 26 Jan, 2025 07:47 AM

 

Published : 26 Jan 2025 07:47 AM
Last Updated : 26 Jan 2025 07:47 AM

திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி!

பந்தை பவுண்டரிக்கு விளாசும் இந்திய அணி வீரர் திலக் வர்மா | படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயம் காரணமாக நித்திஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல், ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித் சேர்க்கப்பட்டிருந்தனர்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பில் சால்ட் 4 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் பந்தில் அவுட் ஆனார். பென் டக்கெட் 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஹாரி புரூக் களமிறங்க, மறுமுனையில் கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். பவர்பிளேவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.

ஹாரி புரூக் 13 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார். ஜாஸ் பட்லர் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். லியாம் லிவிங்ஸ்டன் 13 ரன்களும், ஜேமி ஸ்மித் 22 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஓவர்டன் 5 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார். சிறப்பாக விளையாடி வந்த பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் துருவ் ஜூரெல், ரவி பிஷ்னோய் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்வரிசை வீரர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் 12, ஆதில் ரஷித் 10, மார்க் வுட் 5 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 38 ரன்களை வழங்கிய நிலையில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 32 ரன்களை கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் எப்போதெல்லாம் அதிரடியாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்களோ அப்போதெல்லாம் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் கைப்பற்றி பதிலடி கொடுத்தனர்.

166 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன்களை விரைவாக இழந்தது. அபிஷேக் சர்மா 6 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் பிரைடன் கார்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து பிரைன் கார்ஸ் வீசிய 6-வது ஓவரிலும் சிக்ஸர் அடித்து அசத்தினார் திலக் வர்மா. மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். துருவ் ஜூரெல் 4, ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் நடையை கட்டினர். 9.1 ஓவர்களில் 78 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்களை இழந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் உதவியுடன் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார் திலக் வர்மா. வாஷிங்டன் சுந்தர், மார்க்வுட் வீசிய 13-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி பலம் சேர்த்தார். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக பேட் செய்து வந்த வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 38 பந்துகளில் 50 ரன்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 16-வது ஓவரில் திலக் வர்மா இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு அழுத்தத்தை குறைத்தார்.

அபாரமாக விளையாடிய திலக் வர்மா 39 பந்துகளில், அரை சதம் கடந்தார். இது அவருக்கு 3-வது அரை சதமாக அமைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்களே தேவை என்ற நிலை உருவானது. ஆதில் ரஷித் வீசிய 17-வது ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து அர்ஷ்தீப் சிங்கை (6) அவுட்டாக்கினார். இதனால் ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஏனெனில் கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. இதையடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய், பிரைடன் கார்ஸ் வீசிய 18-வது ஓவரின் 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் லிவிங்ஸ்டன் பந்து வீசினார். திலக் வர்மா முதல் 2 பந்துகளில் ரன்கள் சேர்க்காத நிலையில் 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் திலக் வர்மா ஒரு ரன் சேர்க்க 4-வது பந்தை ரவி பிஷ்னோய் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை ரவி பிஷ்னோய் கால்காப்பில் வாங்க இங்கிலாந்து அணி டிஆர்எஸ் சென்றது. இதில் ரவி பிஷ்னோய் அவுட் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜேமி ஓவர்டன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் திலக் வர்மா 2ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தை அவர், டீப் எக்ஸ்டிரா கவர் திசையில் பவுண்டரி விரட்ட இந்திய அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 55 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்களும், ரவி பிஷ்னோய் 5 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

7 பந்து வீச்சாளர்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினார். அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய், அக்சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் பந்து வீசினார்கள்.

ஜாஸ் பட்லர் சாதனை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், இதுவரை சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 611 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜாஸ் பட்லர்.

150: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 3 சிக்ஸர்கள் விளாசினார். அவர் இதுவரை 151 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2-வது சிக்ஸரை விளாசிய போது சர்வதேச கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்களை விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். உலக அரங்கில் இந்த வகை சாதனையில் அவர் 4-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோஹித் சர்மா (205), நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் (173), ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது வசீம் (158) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x