Published : 25 Jan 2025 10:50 AM
Last Updated : 25 Jan 2025 10:50 AM
2014-ம் ஆண்டு இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்தது. இன்றைய தினமான 25-ம் தேதி அன்று ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒருநாள் பகலிரவுப் போட்டியை இந்திய அணி த்ரில் ‘டை’ செய்ததை மறக்க முடியுமா? அதுவும் கேப்டன் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா பின்னால் வந்து ஆடிய ஆட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால் குறைந்தபட்சம் ‘டை’ செய்ய முடிந்தது.
டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் 111 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மா (39 ரன்கள், 1 பவுண்டரி 4 சிக்சர்கள்), ஷிகர் தவான் (28) மூலம் அதிரடித் தொடக்கம் கண்டு 9 ஒவர்களில் 64 ரன்கள் எடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவினால் 18வது ஓவரில் 79/4 என்றும் பிறகு ரெய்னா (31) ஆட்டமிழக்கும் போது 28வது ஓவரில் 146/5 என்றும் சரிவு கண்டது.
கேப்டன் எம்.எஸ்.தோனி 60 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து டீப் ஸ்கொயர் லெக் நோக்கி ஆண்டர்சன் பந்தை சக்தி வாய்ந்த புல் ஷாட்டை அடிக்க மைதானத்தை தொட்டுவிடும் நிலையில் பந்தை அபாரமாக டைவ் அடித்து கேட்ச் எடுத்தார் டிம் சவுதி. முன்னதாக மார்டின் கப்தில் ஷிகர் தவானுக்கு எடுத்த கேட்சும் அதியற்புதம். இந்திய அணி 36வது ஓவரில் 184/6 என்று தோல்வி முகமே காட்டி வந்தது.
ஆனால், அதன் பிறகுதான் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மறக்க முடியாத அந்த இன்னிங்ஸை ஆடி தோற்கும் மேட்சை டை என்று மாற்றியது கிட்டத்தட்ட வெற்றிக்குச் சமம்தான். ஏனெனில் 4 விக்கெட்டுகள்தான் கையில் இருக்கின்றன, அஸ்வினும் ஜடேஜாவும் 15 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் ஹாமிஷ் பென்னட் என்ற பவுலர் விரட்டல் மன்னன் விராட் கோலிக்கு அடுத்தடுத்து 2 மெய்டன்களை வீசி அவர் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
அஸ்வினும் ஜடேஜாவும் சேர்ந்து 9 ஓவர்களில் 85 ரன்களை விளாசினர். அஸ்வின் 46 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்களை துரித கதியில் எடுத்தார். அதுவும் அஸ்வின் அவுட் ஆனது நியூசிலாந்தின் பிரில்லியன்ஸ் என்றுதான் கூற வேண்டும், அதுவும் மார்ட்டின் கப்தில்.
அஸ்வின் பந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ்தான் என்று கிட்டத்தட்ட தெரிந்தது. ஆனால் கப்தில் பந்தை எம்பிப் பிடித்தார், ஆனால் எல்லைக் கோட்டைக் கடந்து விடுவோம் என்று பந்தை மைதானத்திற்குள் பிளிக் செய்தார் பிறகு அவரே வந்து பிடித்தார். மிக அபாரமான கேட்ச், இது மட்டும் சிக்ஸ் ஆகியிருந்தால் இந்தப் போட்டியை இந்தியா வென்றிருக்கலாம்.
ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கடைசி ஓவர் த்ரில் ஆக அமைந்தது, கோரி ஆண்டர்சன் அந்த 50வது ஓவரை வீசினார். 18 ரன்கள் வெற்றிக்குத் தேவை. முதல் பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார் ஜடேஜா.
அடுத்த பந்து ஜடேஜாவின் நகர்வு ஆண்டர்சனை வைடு போட வைத்தது, ஒரு ரன். அடுத்த பந்தை கவர் மேல் பளார் என்று அறைய நினைத்தார். பந்து நழுவியது. அடுத்த பந்து எதிர்முனையில் டெய்ல் எண்டர் வருண் ஆரோன் இருந்ததால் சிங்கிள் வாய்ப்பிருந்தும் எடுக்கவில்லை.
அடுத்த பந்து மீண்டும் வைடு ஆனது. ஒரு ரன். 3 பந்தில் 12 ரன்கள் என்று எல்லா பந்துகளையும் பவுண்டரி அடிக்க வேண்டும். அடுத்த பந்து ஜடேஜா மிக அருமையாக பைன்லெக் காலியாக இருந்ததைப் புரிந்து கொண்டு நகர்ந்து கொண்டு அங்கு அடித்தார் பந்து பவுண்டரி நான்கு ரன்கள்.
அடுத்த பந்து ஜடேஜா ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை மிட்விக்கெட் மேல் சிக்ஸ் விளாச 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் ஜடேஜா சிங்கிள்தான் எடுத்தார். 2வது ரன்னிற்கு முயற்சி செய்திருக்கலாம், ஏனெனில் பிரஷர் போட்டால் பீல்டர் ஓவர் த்ரோ கூட செய்ய வாய்ப்புண்டு, ஆனால் ஜடேஜா ஏனோ ‘டை’யில் திருப்தி அடைந்தார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 6, 7, 8-ஆம் நிலைகளில் இறங்கும் வீரர்கள் மூவரும் அரைசதம் அடித்த நாள் இது என்பதாலும் தோற்க வேண்டிய போட்டி என்பதாலும் மறக்க முடியாத ஒரு ‘டை’ போட்டியாக இது அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT