Published : 25 Jan 2025 09:19 AM
Last Updated : 25 Jan 2025 09:19 AM

இங்கிலாந்து அணி வீரரின் வழக்கமான புலம்பல்: பனிமூட்டமே காரணமாம்!

இங்கிலாந்து அணி இன்று சென்னையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியினரை சுனில் கவாஸ்கர் ‘புலம்பல்வாதிகள்’ என்று எப்போதும் ஏளனம் செய்வார். அது என்னவோ உண்மைதான் என்பது போல் ஹாரி புரூக் கூறியுள்ளார். நிலைமைகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, அதில் சமாளித்து மீண்டு வருவது தான் சவால் என்பது எந்த ஒரு விளையாட்டின் அடிப்படை அரிச்சுவடி.

புரூக் அன்று 14 பந்துகளில் 17 ரன்களை எடுத்து வருண் சக்ரவர்த்தியின் எதிர் ஸ்பின்னுக்கு பவுல்டு ஆனார். பிறகு இதே பாணியில் லியாம் லிவிங்ஸ்டனையும் வீழ்த்தினார் வருண். அன்று இங்கிலாந்து அணி 65/2 என்பதிலிருந்து 109/8 என்று மடிந்து 132 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பிறகு அபிஷேக் சர்மா மைதானத்தில் பல சிக்சர் தீபங்களை ஏற்றி 34 பந்துகளில் 79 ரன்களை விளாசியதில் 43 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பிஷ்னாய் பந்து வீச்சை எதிர்கொள்வது இங்கிலாந்துக்கு கடுமையாகிப் போனது, அவர் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில், ஹாரி புரூக் கூறும்போது, “ரவி பிஷ்னாயை நான் எதிர்கொள்ளவில்லை, ஆனால் வருண் தனித்துவமான சிறந்த பவுலர். அவர் பந்துகளை எங்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை. மேலும் மைதானத்தில் அடர்த்தியான பனிமூட்டம் இருந்ததால் மேலும் கடினமானது. சென்னையில் இன்று காற்று கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்றும், பந்தை நன்றாகப் பார்க்க முடியும் என்றும் நினைக்கிறேன்.

வருண் சிறந்த பவுலர், பல வித்தைகளை தன் கைகளில் வைத்துள்ளார். அபாரத் துல்லியத்துடன் வீசுகிறார். இந்திய ஸ்பின்னர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் இந்திய அணி உடைந்து நொறுங்கி விடும்” என்கிறார் ஹாரி புரூக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x