Published : 25 Jan 2025 07:05 AM
Last Updated : 25 Jan 2025 07:05 AM

குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை விருந்து: தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா - வைஷாலிக்கு அழைப்பு

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று மாலை நடைபெறும் விருந்தில் பங்கேற்க, தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’ சகோதர, சகோதரியான பிரக்ஞானந்தா - வைஷாலிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில், பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க, நாடு முழுவதும் இருந்து பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தங்கள் பகுதியின் சிறப்பான வளர்ச்சிக்காக உழைத்த 1,000 பஞ்சாயத்து தலைவர்கள், 300 பேரிடர் பணியாளர்கள், நீர்வளத்தை காக்க போராடும் 300 போராளிகள், 200 பாராலிம்பிக் வீரர்கள், விவசாய கடன் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சாலை பணியாளர்கள், சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் சகோதர - சகோதரியான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா - வைஷாலி ஆகியோர் இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவர்கள், அரசுசாரா தொண்டு நிறுவன நிர்வாகிகள், விருது பெற்ற விவசாயிகள் உள்ளிட்டோருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x