Published : 24 Jan 2025 12:56 PM
Last Updated : 24 Jan 2025 12:56 PM
மெல்பர்ன்: நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தின் போது காயம் காரணமாக விலகினார் நோவக் ஜோகோவிச். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்.
இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக 37 வயதான செர்பியாவின் ஜோகோவிச், இடது காலில் டேப்புகளை ஒட்டிக் கொண்டு களம் கண்டார். கால் இறுதிப் போட்டியில் அல்கராஸ் உடன் விளையாடிய போது அவர் காயமடைந்தார்.
இந்த நிலையில் ஸ்வெரேவ் உடனான அரை இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்தார் ஜோகோவிச். தொடர்ந்து அவருடன் பரஸ்பரம் கை குலுக்கி விட்டு களத்தில் இருந்து விடை பெற்றார். அப்போது அவரை பார்வையாளர்கள் இகழ ‘தம்ப்ஸ் அப்’ காட்டியபடி சென்றார்.
“காயம் காரணமாக விலகும் வீரரை பார்வையாளர்கள் இகழ்வதை ஏற்க முடியாது. அப்படி யாரும் செய்யக்கூடாது. அனைவரும் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தி உள்ளீர்கள். 5 செட் கொண்ட போட்டியை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்து இருப்பீர்கள். அதே நேரத்தில் இதற்கு முன்பு காயம் கொடுத்த வலியை தாங்கிக் கொண்டு அவர் பட்டம் வென்றதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். அதனால் அவரது முடிவுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்” என களத்தில் பேட்டி அளித்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சின்னர் மற்றும் பென் ஷெல்டன் ஆகியோர் இடையேயான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வீரரை ஸ்வெரெவ் எதிர்கொள்ள உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT